டெங்குவை தடுக்க வீடு, வீடாக கொசு ஒழிப்பு பணி 400 பேர் நியமனம்; ₹30 லட்சத்தில் மருந்துகள் கொள்முதல்

சேலம், ஜூன் 9: சேலம் மாநகரில் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 400பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ₹30 லட்சத்தில் கொசு ஒழிப்பு மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்துதல், கொசு புழுக்களை கண்டறிந்து அழித்தல் போன்ற டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள 300வீடுகளுக்கு ஒரு கொசு ஒழிப்பு பணியாளர் வீதம் 700 பணியாளர்களை பணியில் ஈடுபடுப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேவைக்கு ஏற்ப 400 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வீடு, வீடாக சென்று டெங்கு நோய் பரப்பும் எடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்துதல், கொசு புழுக்களை கண்டறிந்து அழித்தல் போன்ற டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்ெகாண்டு வருகின்றனர். மேலும் இந்த பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டல அலுவலகத்திற்கு 100பேர் வீதம் 400 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள். இவர்கள் 400பேரும் ஆகஸ்ட் 30ம் தேதி வரை 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தினமும் ₹429 சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கொசுப்புழு வளர் நிலைகள் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு கொசுப்புழு அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், அதற்கு தேவையான ரசாயனங்களை தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘‘பருவமழையையொட்டி சேலம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4 மண்டலங்களிலும் வீடுகளில் கொசுப்புழு அழிக்கும் பணிக்கு தலா 100 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ₹429 சம்பளம் வழங்கப்படும். கொசுப்புழுவை அழிக்கும் வகையில், ₹30 லட்சத்துக்கு கொசு மருந்து வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ₹8.18 லட்சத்துக்கு 1000லிட்டர் டெமிபாஸ் எமல்சிபையபுல், ₹11.89 லட்சத்தில் 1000 லிட்டர் பைரித்ரம், ₹9.91 லட்சத்தில் 5250 லிட்டர் மஸ்கிடோலார் விசைட் ஆயில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த கொசு ஒழிப்பு மருந்துகள் அந்தந்த மண்டல் மலேரியா பிரிவு அலுவலர்களிடம் வழங்கப்படும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு பணியிலும், விழிப்புணர்விலும் ஈடுபட உள்ளனர்,’’ என்றனர்.

The post டெங்குவை தடுக்க வீடு, வீடாக கொசு ஒழிப்பு பணி 400 பேர் நியமனம்; ₹30 லட்சத்தில் மருந்துகள் கொள்முதல் appeared first on Dinakaran.

Related Stories: