சென்னையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பராமரிப்புக்கு ₹3.5 கோடி நிதி ஒதுக்கீடு: காவல்துறை ஆணையர் தகவல்

துரைப்பாக்கம்: சென்னை முழுவதும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பராமரிப்புக்கு ₹3.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரம் முழுவதும் குற்றங்களை தடுக்க போலீசார் 83,226 சிசிடிவி கேமராக்களை அமைத்து உள்ளனர். 3வது கண்ணாக கருதப்படும் சிசிடிவி கேமராக்கள், குற்றங்களை விரைவாகக் கண்டறிய உதவுகின்றன, வழக்குத் தொடர சிறந்த ஆதாரங்களை வழங்க உதவுகின்றன. பெண்கள், குழந்தைகள் பொது இடங்களில் சிறந்த பாதுகாப்புக்கும் பொதுமக்களிடையே சிறந்த பாதுகாப்பு உணர்வை உருவாக்கும் வகையில் திகழ்கின்றன. மேலும் சிசிடிவி கேமராக்கள் குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பெரிதும் உதவி புரிந்து வருகின்றன.

எனவே, சென்னையில் மேலும் 2,730 இடங்களில் 8,189 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த கேமராக்களை கண்காணிக்க அந்தந்த அதிகார எல்லை ஆய்வாளர்களுக்கு கூடுதல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களில் ஏதேனும் ஒன்று பழுதானால் உடனடியாக சீரமைக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. 2021-22ம் ஆண்டில், ஏற்கனவே உள்ள கேமராக்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் தமிழ்நாடு அரசு ₹1.1 கோடியை அனுமதித்த நிலையில், 2022-23ம் ஆண்டில், 1.5 கோடியை அனுமதித்து உள்ளது. இந்நிலையில், வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 55 இடங்களில், ₹32 லட்சம் செலவில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டு மையம் வேளச்சேரி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 47 இடங்களில் ₹24 லட்சம் செலவில் 124 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான சிசிடிவி கட்டுப்பாட்டு மையம் திருவான்மியூர் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருவான்மியூர் சிசிடிவி கட்டுப்பாட்டு மையத்தை நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 2,100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 424 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதோடு மட்டுமல்லாமல், அவைகளை பராமரிப்பதற்காக தமிழக அரசு ₹3.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சென்னை முழுவதும் இருக்கும் 12 காவல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதற்காக தொழில்நுட்ப உதவி ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.

நிகழ்ச்சியில், தென் மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிம்ஹா, இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இணையத்தில் நேரலை
இந்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் நிதியில் ₹6 லட்சம் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் மற்றும் வேளச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 2 கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து மொத்தமாக 274 சிசிடிவி காட்சிகளை இணையத்தின் மூலம் நேரலையாக காணும் வகையில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட சிசிடிவி காட்சி பொருத்தப்பட்டுள்ளது.

The post சென்னையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பராமரிப்புக்கு ₹3.5 கோடி நிதி ஒதுக்கீடு: காவல்துறை ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: