கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

சேலம், ஜூன் 9: சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11, 12ம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தரவுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமானநிலையம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணிக்கு சேலம் அண்ணாபூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர், காலை 10 மணிக்கு சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரு கலையரங்கம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதானம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு சேலம் கருப்பூர் அரசு பொறியல் கல்லூரி வளாக மைதானத்தில், 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறார். அங்கு, ₹2 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். மாலையில், மேட்டூர் சென்று, இரவில் ஓய்ெவடுக்கிறார்.

அடுத்தநாள் (12ம் தேதி) காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதனை நேற்று, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அண்ணாபூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். பின்னர், சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மேடை மற்றும் 50 ஆயிரம் பயனாளிகள் அமரும் வகையில் போடப்படும் பந்தல் பணியை அமைச்சர் நேரு பார்வையிட்டார். அங்கு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: