திருவள்ளூர் அருகே ஆன்லைன் தங்க வர்த்தகத்தில் ரூ.67 லட்சம் மோசடி: மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆன்லைன் தங்க வர்த்தகத்தில் ரூ.67 லட்சம் மோசடி நடந்த விவகாரம் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் – பெரும்புதூர் சாலையில் வசித்து வருபவர் பூசாராம் என்பவரின் மகன் தினேஷ்குமார்(32). தினேஷ்குமாரும், திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கணேசபுரம் பொன்னுசாமி தெருவைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் கார்த்திக்(34) என்பவரும் நண்பர்கள். இதில் கார்த்திக், தங்கத்தை ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் தொழிலை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் லாபம் அதிகளவில் கிடைக்கும் என தினேஷ்குமாரிடம் கார்த்திக் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.18 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என வாட்ஸ் அப் மூலம் கார்த்திக் விளம்பரம் செய்துள்ளார். இதை அறிந்த தினேஷ்குமார், எழுத்துப்பூர்வமாக எந்த ஒப்பந்தமும் செய்யாமல், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மொத்தம் ரூ.67 லட்சத்தை கார்த்திகேயனுக்கு வங்கி மூலமாகவும், நேரடியாகவும் தினேஷ்குமார் வழங்கியுள்ளார்.

இதில் வட்டித் தொகையாக ரூ.9 லட்சத்து 52 ஆயிரத்தை மட்டும் தந்த கார்த்திக், கடந்த 2 ஆண்டுகளாக வட்டி பணத்தையும், முதலீடு செய்த பணத்தையும் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கார்த்திக் தன்னிடம் ரூ.67 லட்சம் பெற்றுவிட்டு மோசடி செய்ததாகக்கூறி, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் தினேஷ்குமார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே ஆன்லைன் தங்க வர்த்தகத்தில் ரூ.67 லட்சம் மோசடி: மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: