2 நாட்களுக்கு பின்னர் ரஷ்யாவில் சிக்கிய 232 பேர் சான்பிரான்சிஸ்கோ பயணம்

மும்பை: ரஷ்யாவில் 2 நாட்களாக சிக்கி தவித்த 232 பேருடன் ஏர் இந்தியாவின் மாற்று விமானம் சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தது. ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ173 போயிங் 777 ரக விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 6) 216 பயணிகள், 16 ஊழியர்களுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றது. ரஷ்ய வான்பகுதியில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகாடன் நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்தவர்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் அமெரிக்கா செல்ல மாற்று விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தது. ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்துக்கு வந்த மாற்று விமானத்தில் 232 பேரும் பாதுகாப்பாக சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டு சென்றனர்.

முழுக்கட்டணம் திருப்பி வழங்கப்படும்
ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. ஏர் இந்தியா வௌியிட்டுள்ள அறிக்கையில், “பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் அவர்களின் பயண கட்டணத்தை திருப்பி தரப்படும். மேலும், ரஷ்யாவின் சிறிய நகரமான மகாடனில் வசதிகள் குறைவாக இருந்தாலும் சூழலை புரிந்து கொண்டு சகிப்புத்தன்மையுடன் 2 நாட்கள் தங்கியிருந்த பயணிகளுக்கு விமான நிறுவனம் நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

The post 2 நாட்களுக்கு பின்னர் ரஷ்யாவில் சிக்கிய 232 பேர் சான்பிரான்சிஸ்கோ பயணம் appeared first on Dinakaran.

Related Stories: