பெரியபாளையம் காவல் நிலையத்தில் துரு பிடித்த நிலையில் நிற்கும் இரு சக்கர வாகனங்கள்: ஏலம் விட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் காவல் நிலையத்தில் பல மாதங்களாக துரு பிடித்த நிலையில் நிற்கும் இரு சக்கர வாகனங்களை ஏலம் விட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் 70 கிராமங்கள் உள்ளது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், சப் – இன்ஸ்பெக்டர் உட்பட தற்போது 30க்கும் மேற்பட்ட போலிசார் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களையும், மணல் கடத்தல், செம்மரம் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவைகளுக்கு பயன்படுத்திய கார், பைக், வேன், லாரி ஆகியவைகளை பறிமுதல் செய்ததுடன், விபத்தில் சிக்கிய வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் பெரியபாளையம் காவல்நிலையம் முன்பும், காவலர் குடியிறுப்பு அருகிலும் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பைக்குகளே அதிகம் உள்ளன. இந்த வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து எதற்குமே உதவாமல் துருப்பிடித்து காயலான் கடைக்கு செல்லும் அளவுக்கு மாறிவிட்டது. மேலும், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் டிராக்டர், மாட்டு வண்டி ஆகியவைகள் பல மாதங்களாக மக்கி மண்ணோடு மண்ணாகி வருகிறது. எனவே இந்த வாகனங்களை ஏலம் விட வேண்டும் அல்லது இந்த வாகனங்கள் மீது உள்ள வழக்குகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வாகன உரிமையாளர்களும், பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது: பெரியபாளையம் காவல் நிலையத்தின் முன்பு 100க்கும் மேற்பட்ட பைக்குகள் பல்வேறு வழக்குகளில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் காவல் நிலையத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள் எனவே பைக்குகளை ஏலம் விடவேண்டும் அல்லது வழக்கை விரைந்து முடித்து பைக் உரியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறினர்.

The post பெரியபாளையம் காவல் நிலையத்தில் துரு பிடித்த நிலையில் நிற்கும் இரு சக்கர வாகனங்கள்: ஏலம் விட கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: