செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காய் பறிமுதல்: உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி

போடி: போடியில் இரண்டாவது நாளாக நேற்று நடந்த சோதனையில் செயற்கை கலர் சாயம் பூசிய 2 டன் ஏலக்காய்களை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக-கேரள பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்கள் இந்திய நறுமண வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு கேரள மாநிலம் புத்தடியிலும், தேனி மாவட்டம் போடியிலும் வாரத்தில் 6 நாள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. தமிழகம், கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகின்றனர். இந்த ஏலக்காய்களில் செயற்கை கலர் சாயம் பூசி செறிவூட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்றுமுன் தினம் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராகவன் தலைமையில், போடி அதிகாரி சரண்யா ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.

டிவி கேகே நகரிலுள்ள குடோன், குரங்கணி சாலையிலுள்ள குடோனில் ஆய்வு செய்ததில் 3,000 கிலோ ரசாயனம் பூசப்பட்ட ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்து, இந்த 2 குடோன்களுக்கும் சீல் வைத்தனர். தொடர்ந்து இரண்டு குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி கார்பைடு கல்லில் பழுக்க வைத்த 700 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். நேற்று இரண்டாவது நாளாக போடி சுப்புராஜ் நகர் 3வது தெருவிலுள்ள குடோன், திருவள்ளுவர் சிலை அருகிலுள்ள குடோன்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் கலர் சாயம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்த 2 டன் ஏலக்காய்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘போடியில் ஸ்பைசஸ் போர்டு மூலம் நடத்தப்படும் இ-சேவை மைய ஏலக்காய் வர்த்தகத்திலும் விரைவில் சோதனை நடத்தப்படும்’ என்றார்.

The post செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காய் பறிமுதல்: உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: