சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 4 வழக்குகள் பதிவு, 6 குற்றவாளிகள் கைது..!!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 6/56 கிலோ கஞ்சா. 650 மெத்தக்குலோன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ ஆகிய சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நேற்று போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6.56 கிலோ கஞ்சா, 650 மெத்தக்குலோன் என்ற போதைப்பொருள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், திருவல்லிக்கேணி, சிவராஜ்புரம், இரயில்வே பாலம் அடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில கஞ்சா கடத்தி வந்த சிக்கந்தர், வ/40, த/பெ.லியாகத் அலி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4.2 கிலோ கஞ்சா, 60 கிராம் கஞ்சா சாரஸ் என மொத்தம் 4.26 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோயில் தெருவில் சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்த அப்துல் கரீம், வ/24, த/பெ.முகமது யூசுப், வள்ளுவர் நகர் 7வது தெரு, எண்ணூர் கைது செய்தனர். அவரிடமிருந்து 650 கிராம் எடை கொண்ட மெத்தக்குலோன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி அப்துல் கரீம், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய சரித்திரி பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் இதர இடங்களிலும் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்ய, வாகனத் தணிக்கைகள், தீவிர ரோந்து பணிகள் மற்றும் சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.

The post சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 4 வழக்குகள் பதிவு, 6 குற்றவாளிகள் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: