குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய் கைது

திருப்பூர்: பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தீபாலப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (28). இவரது மனைவி வசந்தி (26). கடந்த 2018ம் ஆண்டு வசந்தி கர்ப்பமானார். இதற்கிடையே சசிக்குமாருக்கு தெரியாமல், வசந்தியின் பெற்றோர் கருவை கலைத்து விட்டனர். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அப்போது வசந்திக்கு, வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த நபரை 2வதாக திருமணம் செய்துகொண்டார்.

அவருடன் சிறிது காலம் இருந்துவிட்டு, அவரையும் வசந்தி பிரிந்தார். இதன் பிறகு முதல் கணவரான சசிக்குமாருடன் வாழ விருப்பம் தெரிவித்து, அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த சூழலில் வசந்தி 2வது முறையாக கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் 3ம் தேதி உடுமலை அரசு மருத்துவமனையில் வசந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்து விட்டு, குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்ததாக நேற்று முன்தினம் சசிக்குமாரிடம், வசந்தி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் குழந்தையை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வசந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து வசந்தியை போலீசார் கைது செய்தனர்.

குழந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசாரிடம் வசந்தி கூறியதாவது: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்னை இருந்து வந்தது. இதனால் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றேன் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய் கைது appeared first on Dinakaran.

Related Stories: