இளம்பெண் கொலை; 17 வயது சிறுவன் கைது: பரபரப்பு வாக்குமூலம்

தர்மபுரி: காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன், இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து, பாறை இடுக்கில் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி பழைய ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். திமுகவை சேர்ந்த இவர் நகராட்சி 8வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்சா(23). பிபார்ம் படித்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன் ஓசூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, கடத்தூரான் கொட்டாய் அருகே, நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் உள்ள பாறை இடுக்கில், ஹர்சா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், ஹர்சாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலத்தின் அருகே, பேக் ஒன்று கிடந்ததை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் வாலிபர் ஒருவருடன் ஹர்சா பேசிக்கொண்டு இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த கொலையில் தொடர்புடையதாக 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுவன் ஹர்சாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

சிறுவன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: தர்மபுரி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கல்லூரி ஒன்றில் படித்து வருகிறான். கடந்த ஓராண்டாக ஹர்சாவுடன் பழகி வந்துள்ளான். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஹர்சாவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு, ஓசூரில் வேலை செய்யும் இடத்தில் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சிறுவனுடனான தொடர்பை துண்டித்து கொண்டார். மேலும், அவனுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இதனால், அந்த சிறுவன் ஆத்திரமடைந்தான். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பணி முடிந்ததும், ஹர்சா ஓசூரில் இருந்து தர்மபுரிக்கு வந்துள்ளார்.

இதையறிந்த அந்த சிறுவன், பஸ் ஸ்டாண்டில் காத்திருந்துள்ளான். அங்கு ஹர்சா வந்ததும் அவரிடம் பேசிய சிறுவன், எனக்கும் வீட்டில் பெண் பார்த்து விட்டார்கள். நான் இனிமேல் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நாம் அடிக்கடி சந்திக்கும் கோம்பை வனப்பகுதி பாறை பகுதிக்கு, ஒருமுறை மட்டும் வந்து விட்டு சென்றுவிடு எனக் கூறியுள்ளான். இதனை நம்பிய ஹர்சா, அந்த சிறுவனுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். அப்போது ஹர்சா, நாம் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்னை வரும்.

தற்ேபாது நான் விரும்பும் நபர், எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எந்த பிரச்னையும் வராது. எனவே, என்னை மறந்து விடு என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக, ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சிறுவன், ஹர்சாவின் துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து பாறை இடுக்கில் போட்டுவிட்டு தப்பியுள்ளான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post இளம்பெண் கொலை; 17 வயது சிறுவன் கைது: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: