பழநி அருகே மண்டுகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா: 5 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

பழநி: பழநி அருகே நெய்க்காரப்பட்டி மண்டுகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற மண்டு காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பழநி பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த வாரம் துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் சண்முகநதி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று காலை நடந்தது. இதற்காக கோயில் முன்பு பூக்குண்டம் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் கைக்குழந்தைகளுடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் பழநி பகுதி சுற்றப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நெய்க்காரப்பட்டி-கொழுமம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post பழநி அருகே மண்டுகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா: 5 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: