சேவல் ஏந்தும் செல்வன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முருக வழிபாட்டில் சேவல் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. மயிலைப் போலவே சேவலும் முருகனுக்கு வாகனமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால், முருகனுக்குத் தென்னகத்தில் சேவல் வாகனம் இல்லை. இலங்கையில் பௌத்தசமயக் கோயில்களில் முருகன் வழிபடப்படுகின்றார். அங்கு அவர் சேவல் வாகனத்தில் வீற்றிருப்பவராகச் சித்தரிக்கப்படுகின்றார். முருகன் சேவற்கொடியோன் என்று அழைக்கப்படுகிறான். அவன் தன் கொடியில் மட்டுமல்லாது கரத்திலும் சேவலை ஏந்துகின்றான்.

திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் மூலவராகவும், கங்கை கொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தில் உலாத் திருமேனியாகவும் இருக்கும் முருகன், சேவலைக் கரத்தில் ஏந்திய செல்வனாகக் காட்சி தருகிறான். அந்தச் சேவல் ஏந்திய செல்வனின் சிறப்புக்களைத் தொடர்ந்து காணலாம்.சேவல் அக்னியின் வடிவம். வீரத்தின் அடையாளம் நெஞ்சை நிமிர்த்தி வெற்றியைத் தன் கடுங்குரலால் தெரிவிக்கும் பறவை. சண்டைக்கு அஞ்சாதது. வெற்றி இல்லையேல் வீரமணம் என்று நெஞ்சுறுதியோடு தளராது, சோராது போரிடுவது.

போர்க் கடவுளான முருகப் பெருமான் வீரம்மிகுந்த கோழியை ஏந்துகின்றான். அவனது தேரிலுள்ளகொடியில் அக்னி தேவனே சேவலாக இருந்து கூவுகிறான் என்று கந்தபுராணம் கூறுகிறது. சில வடிவங்களில் முருகன் சேவலைத் தன் இடது கரத்தில் ஏந்தியவனாகக் காட்சியளிக்கிறான். திருச்செங்கோடு அரிய சைவத் திருத்தலம். இங்கு மலை மீது அர்த்தநாரீசர் ஆலயம் உள்ளது. இங்கு கருவறையில் சிவ லிங்கத்திற்குப் பதில் தேவியைப் பாகம் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உள்ளது.

இந்த ஆலயத்தில் முருகன் செங்கோடன் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளான். கந்தர் அனுபூதியில் எந்தத் தலத்தையும் குறிக்காத அருணகிரிநாதர், நாக சலவேலவ என்னும் தொடரால் இத்தலத்தைப் போற்றுவது அவர் இத்தலத்தின் மீது கொண்டுள்ள பக்தியைக் குறிக்கிறது. அவர் திருச்செங்கோட்டு வேலவனிடம் சென்றே இடங்கள் கந்தா எனும் போது செஞ்சேவல் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகிறார்.

இதையொட்டி திருச்செங்கோட்டு மலை மீது முருகன் வலக்கையில் நெடிய வேலையும் இடையில் வைத்திருக்கும் இடது கரத்தில் வேலை வைத்து அணைத்தவாறு காட்சி தருகிறார். இது குமார தந்திரமும் சிற்பநூலும் கூறாத வடிவமாகும்.மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது கங்கை கொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழீசர் ஆலயமாகும். இங்கு சோழர் கால முருகன் சிற்பம் உள்ளது. இது வழக்கமான முருகனின் சிலைகளில் இருந்து மாறுபட்டதாகும். சிற்ப நூல்கள் இவ்வடிவை குமாரசாமி என்று குறிக்கின்றன.

இதில் முருகன் முன் கரங்களில் வாளையும், கேடயத்தையும் தாங்கியவாறு உள்ளார். பின் வலது மலர் ஏந்த இடது பின் கையில் சேவலை ஏந்தியுள்ளார். இது வேறெங்கும் காணக் கிடைக்காத உலாத் திருமேனியாகும். ஆகம வழிக்கோயில்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் மயில் பொறித்த கொடி ஏற்றப்பட்டாலும், அடியவர்கள் கொண்டாடும் விழாக்களில் சேவல் சின்னம் பொறித்த கொடியையே ஏற்றுகின்றனர். அன்பர்கள் நடை பயணம் மேற்கொள்ளும் வேளையில் கூட்டத்திற்கு முன்பாகச் சேவற்கொடியை ஏந்திச் செல்கின்றனர்.

முருகன் சந்நதிகளில் இடம் பெறும் குத்து விளக்குகளின் உச்சியில் மயில் வடிவை அமைப்பது போலவே சேவலின் வடிவையும் அமைத்துள்ளனர். இலங்கையில் சேவல் வடிவை உச்சியில் கொண்ட விளக்குகள் சைவ, பௌத்த ஆலயங்களிலும் பரவலாக இருக்கின்றன.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

The post சேவல் ஏந்தும் செல்வன் appeared first on Dinakaran.

Related Stories: