ரயில் டிக்கெட் இன்றி பயணம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் ரூ.1 கோடி அபராதம் வசூல் செய்து சாதனை

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.1 கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் உத்தரவின்பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழுவினர், ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 16,273 பேர் சிக்கினர். இவர்கள் மீது, ரயில்வே சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.1.05 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தொடர்ந்து அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரியது. அவர்களிடமிருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ரயில் டிக்கெட் இன்றி பயணம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் ரூ.1 கோடி அபராதம் வசூல் செய்து சாதனை appeared first on Dinakaran.

Related Stories: