உடையார்பாளையம் பேரூராட்சியில் ஆதார், அஞ்சலக சேவை சிறப்பு முகாம் திருச்சி முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்

அரியலூர், ஜூன் 8: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடையார்பாளையம் பேரூராட்சி மற்றும் அஞ்சல் துறை இணைந்து நடத்தும் மாபெரும் ஆதார் மற்றும் இதர அஞ்சல் சேமிப்பு கணக்குகள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுபற்றி திருச்சிராப்பள்ளி முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொதுமக்கள் ஒவ்வொருவர் அன்றாட வாழ்விலும் அஞ்சல் துறையானது முக்கிய அங்கம் வகிக்கிறது. அஞ்சல் துறையின் மூலம் சேமிப்பு கணக்குகள், செல்வமகள் சேமிப்பு கணக்குகள், மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மகளிர் மேன்மை சிறப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கணக்குகளுடன் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பபீடு உள்ளிட்ட சேவைகள் மூலம் அனைவரும் பலனடைந்து வருகின்றனர். மேலும் அஞ்சலகத்தின் மூலம் ஆதார் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், பிறந்த தேதி , முகவரி திருத்தம் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இந்திய போஸ்ட் பேமேன்ட் பேங்க் மூலம் முதியோர் ஓய்வூதிய தொகை, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட நிறைய அரசாங்க நலத்திட்டங்கள் நாள்தோறும் பொதுமக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்றடைகின்றன. அவ்வகையில் அஞ்சல் துறையின் சேவைகள் இன்னும் நிறைய பேருக்கு கொண்டு செல்லும் பொருட்டு அஞ்சல் துறையானது உடையார்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் அவர்களின் ஆதரவுடன் வருகின்ற ஜூன் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் உடையார்பாளையம் செட்டியார் தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதார் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அஞ்சலக சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

The post உடையார்பாளையம் பேரூராட்சியில் ஆதார், அஞ்சலக சேவை சிறப்பு முகாம் திருச்சி முதுநிலை கண்காணிப்பாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: