கொடுமுடி வட்டாரத்தில் அஞ்சூர் கிராமத்தில் விவசாயிகள் மேளா; அதிகாரிகள் ஆலோசனை

கொடுமுடி, ஜூன் 8: வேளாண்மை உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞாின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் அஞ்சூர் கிராமத்தில் விவசாயிகள் மேளா நடைபெற்றது. கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமை வகித்தார். பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வேளாண் ஆராய்ச்சியாளர் கணேசன் அனைத்து பயிர்களின் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். ஜே.கே.கே.எம். வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் பகவத் சிங் டிஜிட்டல் வேளாண்மை தொழில் நுட்பங்களை கைபேசியில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கமளித்தார்.

இதைத்தொடர்ந்து, கால்நடை மருத்துவர் பிரகாஷ் கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்ப்பது மற்றும் சந்தைப் படுத்தும் முறைகள் பற்றிய விபரங்களை எடுத்துரைத்தார். இதில், கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அடங்கிய தாதுஉப்புகள் பாக்கெட் வழங்கப்பட்டது. மேலும் குடல்புழு நீக்கம் முகாம் நடத்தப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குநர் தியாகராஜன் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படும் திட்டங்கள் மற்றும் மானிய விவரங்களை விளக்கினார்.

இதையடுத்து, வேளாண்மை அலுவலர் ஜமுனா மண் மாதிரி சேகரித்தல் மற்றும் மண் மாதிரி எடுப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். மேலும், விவசாயிகளிடம் இருந்து மண் மற்றும் தண்ணீர் மாதிரிகள் பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டது. வேளாண்மை இளநிலை பொறியாளர் கண்ணன் இயந்திரங்கள் வாடகை, வேளாண் கருவிகள் பயன்பாடு மற்றும் மானிய விவரங்கள் பற்றி கூறினார். தொடர்ந்து, துணை வேளாண் அலுவலர் ராஜாமணி, உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினர்.

உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி கூறினார். இந்த விவசாயிகள் மேளாவில் வேளாண்மைத்துறை நுண்ணீர் பாசனத்திட்டம் மற்றும் கால்நடைத்துறை சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரேணுகா உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மஞ்சுரேகா, சிதம்பரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதில், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post கொடுமுடி வட்டாரத்தில் அஞ்சூர் கிராமத்தில் விவசாயிகள் மேளா; அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: