பாசன சபைகளுக்கு விரைவில் தேர்தல் சிறுகுறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 8: கீழ்பவானி பாசனத்தில் உள்ள பாசன சபைகளுக்கு தாமதமின்றி தேர்தல் நடத்த வேண்டும் என்று சிறு, குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திர ராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கீழ்பவானி அணையானது 1952ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் நிறுவப்பட்டது. இந்த அணையின் மூலம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் உள்ளிட்ட பழைய பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், கீழ்பவானி பாசனத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன பெற்று வருகின்றன.

இது தவிர 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனம் பெற்று வருகின்றது. கீழ்பவானி பாசன திட்டம் என்பதோடு மட்டுமல்லாது நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகவும் இருந்து வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் குடிமராமத்து என்ற பெயரில் இந்த கால்வாய் பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டது. பல ஆயிரம் லோடு மணல் விற்கப்பட்டுள்ளது. விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படாத பாசன சபைகளை வைத்துக்கொண்டு அதிகாரிகளின் துணையோடு இந்த செயல் நடைபெற்றுள்ளது. எனவே பாசன சபைகளுக்கு உடனடியாக தமிழக அரசு தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பாசன சபைகளுக்கு விரைவில் தேர்தல் சிறுகுறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: