பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஸ்வியாடெக்: மாயா முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். காலிறுதியில் அமெரிக்காவின் கோ காஃப் (19 வயது, 6வது ரேங்க்) உடன் நேற்று மோதிய போலந்து நட்சத்திரம் ஸ்வியாடெக் (22 வயது) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 28 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.கோகோவுடன் மோதிய 7 போட்டியிலும் ஸ்வியாடெக் வெற்றியை வசப்படுத்தி உள்ளதுடன், இதுவரை ஒரு செட்டை கூட இழக்கவில்லை (14-0). 4 ஆண்டுகளில் ஸ்வியாடெக் 3வது முறையாக பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு காலிறுதியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (28 வயது, 7வது ரேங்க்) மோதிய பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹதாஜ் மாயா (27 வயது, 14வது ரேங்க்) முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் இரு வீராங்கனைகளும் விடாப்பிடியாகப் போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் மாயா 7-6 (7-5) என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி ஜெபரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த மாயா 3-6, 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 29 நிமிடத்துக்கு நீடித்தது. அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் – ஹதாஜ் மாயா, முச்சோவா – சபலென்கா மோதுகின்றனர். ஆண்கள் அரையிறுதியில் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கரஸுடன் (செர்பியா) செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் மோதவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஸ்வியாடெக்: மாயா முன்னேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: