குக்கர் தலைவரை வரவேற்க முக்கிய நிர்வாகிகள் யாரும் வராததை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘குக்கர் தலைவரை வரவேற்க கூட்டமே இல்லையாமே, ஏனாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில் சேலம் விஐபி கை ஓங்கியிருப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தேனிக்காரர், குக்கர், சின்னமம்மி ஆகியோர் முக்கூட்டணி அமைக்கணும்னு முடிவு செய்திருந்தாராம். அதற்கான வாய்ப்பாக நெற்களஞ்சியத்தில் உள்ள கட்சி தலைவரின் திருமணத்தை பயன்படுத்த முடிவு செய்தாராம். இதையறிந்த சேலம்தரப்போ, இலையின் பழைய ஆதரவாளர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுக்க முடிவு செய்தாராம். இதில் டெல்டா மாவட்டத்தில் உள்ள குக்கர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை குறி வைத்திருந்தாராம். இதற்கான வேலையை விரைந்து முடிப்பதற்காக ‘மாஸ்டர் பிளான்’ போட்டு அவரது அணியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களிடம் சேலம் விஐபி கொடுத்திருந்தார். அந்த மாஸ்டர் பிளான்படி நெற்களஞ்சியம், மலைக்கோட்டை மாவட்ட குக்கர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு ‘வைட்டமின் ப’ ஆசை காட்டி சேலம் விஐபி பக்கம் அவரது டீம் இழுத்து கொண்டதாம். டெல்டா மாவட்டத்தில் உள்ள குக்கர் கட்சியை காலி செய்ய முடிவு செய்த சேலம் விஐபி டீம், அதற்கான திரைமறைவான வேலையில் தொடர்ந்து இறங்கியுள்ளது. ஸ்கெட்ச் போட்டு முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் சேலம் விஐபி டீம் தூக்குவதால் குக்கர் தலைமை, சேலம் விஐபி மீது உச்ச கட்ட கோபத்தில் இருக்காம்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு குக்கர் கட்சி தலைமை மலைக்கோட்டைக்கு திடீர் விசிட் அடித்தார். தொடர்ந்து, மலைகோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு சென்று மணிக்கணக்கில் தரிசனம் செய்தார். குக்கர் தலைமை எப்போது மலைக்கோட்டைக்கு வந்தாலும், அவரது கட்சியினர் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பார்கள். தற்போது குக்கர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சேலம் விஐபி ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருவதால் அவரை வரவேற்க முக்கிய நிர்வாகிகள் இல்லை. இதனால் விரக்தியில் இருந்த குக்கர் தலைமை, வெளியே காட்டிக்கொள்ளாமல் தன்னந்தனியாக வந்து சென்றாராம்.. அண்ணே போனவங்க எல்லாம் விரைவில் நம்மை தேடி வருவாங்க என்று சொல்லி கரன்சியை கறக்க பார்த்தார்களாம்.. வழக்கம்போல குக்கர் தலைவர் நீ நல்லா சொன்ன, இந்தா பிடி என்று கோயில் விபூதியை கொடுத்துவிட்டு காரில் ஏறி கிளம்பிட்டாராம். இதை பார்த்த மற்றவர்கள் மவுனமாக சிரித்தனர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொண்டர்களே இல்லாத நிலையில் ஆர்ப்பாட்டம் செய்வதை தந்திரமாக தவிர்த்த தலைவரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தலைவரே சமீபகாலமா நீங்க அறிக்கை மட்டுமே விடுறீங்க… ஆர்ப்பாட்டம் ஏதுவும் இல்லையா என்று தாமரை கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டால் பதிலே இல்லையாம். அப்படியே சொன்னாலும் அதில் உண்மை இல்லையாம். என்ன காரணம் என்று தாமரை நிர்வாகிகளிடம் கேட்டால் அவர்கள் எப்போதுமே தமாசாக பேசுவார்கள், இவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்து கொள்ளாதீங்க என்று அவரது அடிபொடிகள் கிண்டலாக சொல்றாங்க. தமிழ்நாட்டில் சமீபகாலமாக அறிக்கைகளால் மட்டுமே உயிர் வாழும் கட்சி என்ற பெயர் கட்சி தொண்டர்களிடையே வேகமாக பரவி, இனி தலைவரிடம் இருந்து அறிக்கை வந்தால் படித்துவிட்டு, நாம் ஒரு அறிக்கையை நம் சார்பில் வெளியிடுவோம். அது சில நூறு ரூபாய்களோடு போய்விடும் என முடிவுக்கு வந்து இருக்காங்களாம். இது குறித்து மாம்பழ ஊரில் தாமரை கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம், அவர்களோடு நட்பில் இருக்கும் நிர்வாகி ஒருத்தரு, கேள்வி எழுப்பினாராம். அதுக்கு அந்த நிர்வாகி, எங்க அறிக்கையை பார்த்து தமிழகத்தில் இருக்கிற பொலிடிக்கல் பார்ட்டி எல்லாம் அரண்டு கிடக்குது. இதுவே எங்களுக்கு போதுமானது. ஆர்ப்பாட்டம் நடத்தி, பெரும் கூட்டத்தை கூட்டி பப்ளிக்குக்கு சிரமம் தரக்கூடாது என்பதற்காகவே அறிக்கை அரசியலை தொடர்ந்து வருகிறோம் என்று பொய்யை அள்ள அள்ள அள்ளிவிட்டாராம். அதைக்கேட்ட அந்த மாஜி சமீபத்தில் கூட பிரமாண்ட ஆர்ப்பாட்டம் என்று சொல்லி 23பேரை கூட்டிட்டு வந்திருந்தீங்களே அதைச் சொல்றீங்களா என்று சிரிப்பே இல்லாமல் கேட்டாராம். சம்பந்தப்பட்ட நிர்வாகி முழித்தாராம். நம்ம பார்முலாவை கேலி செய்துட்டு கிளம்புறாரு என்று தன் அடிபொடிகளிடம் சொன்னாராம் தாமரை நிர்வாகி…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘லஞ்ச பணத்தில் குளிக்கும் நபர்களை பற்றி சொல்லுங்க.. நாங்க யாருன்னு தெரிஞ்சுக்கிறோம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயரில் முடியும் நகரின் ஊரமைப்பு அலுவலகத்தில் முந்தைய இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகளால் இப்போதும் வசூல் வேட்டை நடக்குதாம். வீடுகள், கட்டிடங்கள் கட்ட இந்த அலுவலகத்திடம் தான் என்ஓசி வாங்க வேண்டும். ஆயிரம், 1,500 சதுர அடிகளுக்குள் வீடுகள், சிறிய கடைகள் கட்டுபவர்கள், ஆயிரம் சதுர அடிக்கு மேல் பெரிய வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், இடங்களை பிளாட்களாக பிரித்தல் உள்ளிட்டவைகளுக்கு இங்கு சதவீத அடிப்படையில் இந்த இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகள் குழு லஞ்சம் வசூலிக்கிறதாம். ஒரு நாளைக்கு பல லட்சங்களுடன்தான் வீட்டுக்கு போறாங்களாம். அனைத்து ஆவணங்களை சரியாக கொடுத்தாலும், வருவாய் எதிர்பார்ப்பில் முக்கிய ஆவணம் இல்லை என அப்ரூவல் தராது திரும்பத் திரும்ப அனுப்பி விடுவதும் நடக்கிறது. சமீபத்தில் இந்த அலுவலகத்தால் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டு புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்தது. கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொஞ்ச நாட்கள் ஓய்ந்திருந்தவர்கள் இப்போது தங்கள் வசூல் வேட்டையை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். இவர்களது பட்டியலை சேகரித்து உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை வேகப்படுத்தி இருப்பது, இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.

The post குக்கர் தலைவரை வரவேற்க முக்கிய நிர்வாகிகள் யாரும் வராததை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: