முதல்வர் நினைக்கின்ற வேலைகளை முழுமையாக முடிக்க அதிகாரிகளோடு நல்ல முறையில் இருக்க வேண்டும்: அமைச்சர் காந்தி பேச்சு

திருவள்ளூர், ஜூன் 8: முதல்வர் நினைக்கின்ற வேலைகளை முழுமையாக முடிக்க அதிகாரிகளோடு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று திருவள்ளூர் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் திருவள்ளூர் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் பேசியதாவது: கலைஞரின் வழியிலேயே தமிழ்நாடு முதலமைச்சரும் இந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றி வருகிறார். இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் என்னென்ன குறைகள் இருக்கிறது என்பது பற்றியும், அறிவித்த பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது என்பது பற்றியும், என்னென்ன கோரிக்கைகள் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்வதற்குத்தான் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அதனை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். எனவே, நாங்கள் சொல்லுவதை அதிகாரிகளான நீங்கள் நிறைவேற்ற வேண்டும். ஒரு பகுதியில் பணிகள் நடைபெறும்போது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் மூலமாக திட்டங்களை செயல்படுத்தினால்தான் நாங்கள் அப்பணிகளில் ஈடுபட்டிருப்பது மக்களுக்கு தெரியும். மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்புள்ள பதவிகளில் இருக்கும் நாம், அந்தந்த பகுதிகளுக்கு தேவையானவற்றை நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எந்த விஷயமானாலும் என்னிடம் தெரிவித்தால் நான் நிச்சயமாக அந்த பணிகளை நிறைவேற்றுவேன். அதிகாரிகளோடு நல்ல முறையில் இருந்தால்தான் முதல்வர் நினைக்கின்ற வேலைகளை முழுமையாக முடித்து, சாதிக்க முடியும். ஆகையால் நீங்கள் தெரிவித்த சின்னச்சின்ன குறைகளும் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக சரிசெய்யப்படும். இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், திருவள்ளூர் எம்பி கே.ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், எஸ்.சுதர்சனம், டி.ஜெ.கோவிந்தராஜன், க.கணபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வன அலுவலர் ராம் மோகன், பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post முதல்வர் நினைக்கின்ற வேலைகளை முழுமையாக முடிக்க அதிகாரிகளோடு நல்ல முறையில் இருக்க வேண்டும்: அமைச்சர் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: