முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 2 ஆண்டில் 71,057 மனுக்களுக்கு தீர்வு₹1.70 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கிருஷ்ணகிரி, ஜூன் 8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் 71,057 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் ₹1.70 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் குறை தீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து “முதல்வரின் முகவரி” என்ற புதிய துறையை, அரசு உருவாக்கியுள்ளது. முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் பல்வேறு அலுவலகப் பிரிவு அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.

முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த புதிய துறை செயல்படுகிறது. தலைமை செயலகத்தில் முதல்வரின் முகவரி துறைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்குகிற ஒருங்கிணைப்பு துறையாக பொதுத்துறை செயல்படுகிறது. பொது குறைதீர்ப்பு மேற்பார்வை அலுவர்களுக்கு தேவைப்படும் அனைத்து கட்டமைப்பு வசதிகள், தளவாடங்கள் மற்றும் பிற வசதிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. தகவல் அழைப்பு மையம் 1100 என்ற உதவி எண் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி மனுக்கள் முதல்வரின் முகவரி திட்ட துறைக்கு செல்கிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதல்வரின் முகவரி என்ற துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள துறைகள் மற்றும் பிரிவுகள் அனைத்துமே, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டவை. இவற்றுக்கு வரக்கூடிய மனுக்களும், கோரிக்கைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இதனால், அலுவலர்களுக்கு வேலைபளு, காலவிரயம், காலதாமதம் ஆகியவை ஏற்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காக, இந்த பிரிவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நேரடி பார்வையில் இயங்கும் என்பதால், வரக்கூடிய மனுக்களும், கோரிக்கைகளும் விரைந்து தீர்க்கப்படும். உதாரணமாக பட்டா வழங்குமாறு கோரும் ஒரு நபர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஒரு மனுவை அனுப்புகிறார். அதே மனுவை உங்கள் தொகுதியில் முதல்வர் துறைக்கு அனுப்புகிறார்.

அந்த மனுவை, கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர் அளிக்கிறார். ஒரே மனுவை அனைத்து இடங்களிலும் பரிசீலனைக்கு எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மனித உழைப்பு வீணாவதுடன், காலவிரயமும் ஏற்படுகிறது. ஒரு நிமிடத்தில் முடிய வேண்டிய பணிக்கு நான்கு, 5 நிமிடங்கள் ஆகின்றன. ஒருங்கிணைந்த ஒரே துறையாக இப்போது உருவாக்கப்பட்டுள்ளதால், மனுக்களை பரிசீலப்பதும், நடவடிக்கை எடுப்பதும் எளிதான பணியாக மாறும். கால விரயம் தவிர்க்கப்படும். மக்களுக்கான அரசின் சேவையும், செயல்திறனும் இன்னும் அதிகரிக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது முதலமைச்சரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டில் பொதுமக்களிடம் இருந்து 72 ஆயிரத்து 496 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் 71 ஆயிரத்து 57 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் 6,632 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 85,871 மாணவ, மாணவிகளுக்கு ₹16 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரத்து 831 கல்வி கடனுதவி, 157 நபர்களுக்கு சுயதொழில் துவங்க ₹1.70 கோடி என மொத்தம் ₹17 கோடியே 28 லட்சத்து 70 ஆயிரத்து 821 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 2 ஆண்டில் 71,057 மனுக்களுக்கு தீர்வு₹1.70 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: