ஜனவரி மாதம் சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னையில் 2024ம் ஆண்டு நடக்க உள்ள சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த நிகழ்வில் கலந்து கொண்டு புத்தக கண்காட்சிக்கான ஒலி, ஒளி காட்சியை திரையிட்டார். பின்னர் சிறந்த புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்ய ரூ.3 கோடி நிதி வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில், வரும் ஜனவரி மாதம் 16, 17, மற்றும் 18ம் தேதிகளில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக் கண்காட்சி நடைபெறுகிறது. உலகில் உள்ள நல்ல படைப்புகளை தமிழில் கொண்டு வருவதும், தமிழ் நூல்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கவும் மானியம் வழங்கும் நோக்கில் இந்த புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டில் நந்தனம் மைதானத்தில் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி நடந்த போது 25 நாடுகளில் இருந்து புத்தகங்கள் மொழி பெயர்ப்புக்காக 365 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன. வரும் ஆண்டில் நடக்க உள்ள புத்தக கண்காட்சியில் 50 நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவர்களுக்கான விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் அந்தந்த மண்டலங்களுக்கு சென்றுள்ளன. அவற்றை மாணவர்களுக்கு அளிக்க ஏற்பாடுகளைசெய்துள்ளோம். பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டில் இருந்து முறையாக காலிப் பணியிடங்களை் அவர்கள் நிரப்பாமல் விட்டதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை படிப்படியாக சரி செய்து வருகிறோம். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post ஜனவரி மாதம் சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: