கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும், அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிரப் புயல் காரணமாக பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் நீடித்து வரும் வெயில் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சில மாவட்டங்களில் கணிசமாக வெயில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் அதிகரித்துள்ளது. அதேபோல சென்னை, சேலம், கோவை, தர்மபுரி, திருவள்ளூர், நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. மேலும், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அதிகபட்சமாக திருத்தணியில் 106 டிகிரி(பாரன்ஹீட்) கொளுத்தியது. வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, காஞ்சிபுரம் 104 டிகிரி, நெய்வேலி, மதுராந்தகம், செங்கல்பட்டு 102 டிகிரி, ஆம்பூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராஜபாளையம், பல்லாவரம், திருவண்ணாமலை 100 டிகிரி, சென்னை 99 டிகிரி, நாமக்கல், திண்டுக்கல், காரைக்குடி, புதுச்சேரியில் 97 டிகிரி வெயில் நிலவியது. மேற்கண்ட நிகழ்வில் வெப்ப சலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. 11ம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குமரிக் கடல் பகுதிகள், மன்னார்வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும், மத்தியகிழக்கு மற்றும் மேற்குவங்கக் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும், அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிரப் புயல் காரணமாக சற்று தாமதமாக பருவமழை தொடங்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ‘பிப்பர்ஜாப்’ புயல்
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் மாலையில் புயலாக மாறியது. இதற்கு ‘பிப்பர்ஜாப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அது மேற்கு திசையில் நகர்ந்து நேற்று தீவிரப்புயலாக மாறியுள்ளது. அது மும்பைக்கு தென்மேற்கு பகுதியில் 800 கிமீ ெதாலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று அதி தீவிரப் புயலாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு-வடமேற்கு திசையில் அடுத்த 3 நாட்களில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

The post கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: