விமான நிலையத்தில் பரபரப்பு மும்பை செல்ல துப்பாக்கி குண்டுடன் வந்த மாணவர்

சென்னை: சென்னையில் இருந்து மும்பை செல்ல வந்த, பீகாரை சேர்ந்த எம்பிஏ மாணவர் கைப்பையில், துப்பாக்கி குண்டு இருந்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷால் சிங் (24) .இவர் புதுச்சேரியில் தனியார் கல்லூரியில் எம்பிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் விஷால் சிங்கின் அண்ணன், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிறார். அண்ணணை பார்க்க மும்பை செல்வதற்காக, விஷால் சிங் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் மும்பை செல்ல டிக்கெட் எடுத்து, போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றார். அதற்கு முன்னர் பாதுகாப்பு சோதனை பகுதியில், பாதுகாப்பு அதிகாரிகள், விஷால் சிங் உடமைகளை ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர்.

அப்போது விஷால் சிங், கைப்பையில் இருந்து, வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பையை தனியே எடுத்துவைத்தனர். விசாரணையில் விஷால் சிங், அந்த கைப்பையில் குண்டு எதுவும் இல்லை என்று கூறினார். ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள், கைப்பையை சோதித்தபோது, அதனுள் எஸ்.எல்.ஆர். துப்பாக்கியில் பயன்படுத்தும், துப்பாக்கிக்குண்டு ஒன்று லைவ்வாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து விஷால் சிங் மும்பை பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். அதன் பின்பு விஷால் சிங்கையும், துப்பாக்கி குண்டையும் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விஷால் சிங், தனது தந்தை, ஸ்ரீ நகரில் சி ஆர் பி எப் உதவி ஆய்வாளராக பணியில் இருக்கிறார். இந்த பை எனது தந்தை உடையது தான். அவர் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு, இந்தப் பையில் இருந்திருக்கிறது. நான் கவனிக்காமல் எடுத்து வந்து விட்டேன் என்று கூறினார். ஆனாலும் போலீசார் துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்தனர். அதோடு ஸ்ரீ நகரில் உள்ள, விஷால் சிங்கின் தந்தைக்கும் தகவல் கொடுத்தனர். அதோடு விஷால் சிங் தங்கியிருந்த புதுச்சேரி மாநிலம், அவர் படித்த கல்லூரி, ஆகியவற்றிலும் விஷால் சிங்கின், பின்னணி குறித்து விசாரணை நடத்துகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விமான நிலையத்தில் பரபரப்பு மும்பை செல்ல துப்பாக்கி குண்டுடன் வந்த மாணவர் appeared first on Dinakaran.

Related Stories: