திரைப்படம் எடுப்பதாக கூறி இயக்குநர் கோபி நயினார் ரூ.30 லட்சம் ஏமாற்றினார்: கமிஷனர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டு தமிழ் பெண் புகார்

சென்னை: திரைப்படம் எடுப்போவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.30 லட்சம் பெற்ற சினிமா இயக்குநர் கோபி நயினார், சினிமா எடுக்காமல் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இலங்கை புலம் பெயர்ந்த தமிழ் பெண் சியாமளா யோகராஜா (56) நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், ‘‘நான் இலங்கையில் இருந்து 35 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறேன்.

நான் பல குறும்படங்கள் எடுத்து உள்ளேன். இதனால் சினிமா எடுக்கும் ஆர்வத்தில், கடந்த 2018ம் ஆண்டு ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மூலம் ‘அறம்’ திரைப்பட இயக்குநர் கோபி நயினார் அறிமுகமானார். அப்போது, ‘கருப்பர் நகரம்’ என்ற திரைப்படம் எடுக்க இருக்கிறேன். இந்த படத்துக்கு என்னை தயாரிப்பாளராக இருக்க சொன்னார். பிறகு நான் சென்னை வந்ததும் விஜய் அமிர்தராஜ் அலுவலகத்தில் முன்பணமாக ரூ.5 லட்சத்தை கொடுத்தேன். பிறகு முறையாக பத்திரப்பதிவு செய்து மேலும் ரூ.25 லட்சம் பணத்தை இயக்குநர் கோபி நயினாரிடம் கொடுத்தேன்.

அதன்படி புதிய திரைப்படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் ஓட்டேரியில் தொடங்கினர். அப்போது நானும் உடன் இருந்தேன். இந்த திரைப்படத்தை 6 மாதத்தில் முடிப்பதாக இயக்குநர் உறுதி அளித்தார். இதனால் நான் பிரான்சுக்கு சென்றுவிட்டேன். பின்னர், திரைப்பட லாபத்தில் 25% தருவதாகவும் உறுதி அளித்தார். பிறகு கடந்த 2019ம் ஆண்டில் திடீரென என்னுடனான தொடர்பை இயக்குநர் துண்டித்துவிட்டார். சொன்னப்படி திரைப்படத்தையும் அவர் எடுக்கவில்லை. திரைப்படத்தின் விளம்பரங்களில் கூட எனது பெயர் இடம்பெறவில்லை. கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் இந்தியா வரமுடியவில்லை. பல முறை நான் கொடுத்த ரூ.30 லட்சத்தை திரும்ப கேட்டும் இயக்குநர் கோபி நயினார் திரும்ப கொடுக்க மறுக்கிறார். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

The post திரைப்படம் எடுப்பதாக கூறி இயக்குநர் கோபி நயினார் ரூ.30 லட்சம் ஏமாற்றினார்: கமிஷனர் அலுவலகத்தில் பிரான்ஸ் நாட்டு தமிழ் பெண் புகார் appeared first on Dinakaran.

Related Stories: