விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதல் திரவுபதி அம்மன் கோயில் மூடி சீல்வைக்கப்பட்டது: பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி திரவுபதி அம்மன் கோயில் விவகாரத்தில் சுமூகதீர்வு ஏற்படாததால் கோயிலை மூடி வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். பதற்றம் நிலவி வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான தர்மராஜா திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி தேர் திருவிழாவின் போது பட்டியலின இளைஞர்கள் சிலர் கோயிலுக்கு சென்றதை மற்றொரு சமூகத்தினர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் அன்றிரவு விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் பட்டியலின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்துவரும் பிரச்னை தொடர்பாக விழுப்புரம் ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமையில் 5 முறை அமைதிக்கூட்டம் போடப்பட்டும் சுமுகதீர்வு ஏற்படவில்லை. கலெக்டர் பழனி தலைமையில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் இருதரப்பினரையும் தனித்தனியாக அழைத்துபேசியபோதும் சுமூகத்தீர்வு ஏற்படவில்லை. இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் நேற்று காலை விழுப்புரம் ஆர்டிஓ ரவிச்சந்திரன் கோயிலை பூட்டி சீல் வைத்தார். பதற்றம் நிலவுவதால் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இப்பிரச்னை தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் இருதரப்பினரும் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகி தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும். அதன்பின்னர் 2ம் கட்ட விசாரணை செய்யப்பட்டு இறுதிமுடிவு அறிவிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதல் திரவுபதி அம்மன் கோயில் மூடி சீல்வைக்கப்பட்டது: பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: