முத்தாலங்குறிச்சி – குணவதியம்மன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மதுரையைச் சேர்ந்த வணிகர் ஒருவரின் மனைவிக்கு தலைப் பிரசவத்திற்கான நேரம் வந்தது. பெண்ணின் தாய் வீட்டில் வசதியில்லை. வணிகக் கணவனும் மனைவியை திட்டித் தீர்த்தான். மனமுடைந்த கர்ப்பிணி, தாமிரபரணிக் கரையோரமாக இலக்கில்லாது நடந்தாள். நாக்கு வறண்டது. பிரசவ வலி எடுத்தது. ‘‘அம்மா தாயே, என்னை காப்பாற்று’’ என்று கதறியபடி வீழ்ந்தாள். அங்கு வந்த வயதான பெண்மணி அவளை அள்ளிச் சென்று பிரசவம் பார்த்தாள். மனைவியைத் தேடி இந்தப் பக்கம் வந்தான் கணவன். அப்போது திடீரென ஒரு சிறுமி தோன்றி, ‘‘அதோ உன் மனைவி அங்கிருக்கிறாள்’’ என்று கூறி ஒரு குடிசையைக் காட்டினாள். உள்ளே குழந்தையோடு இருந்த மனைவியிடம் வந்து மன்னிப்பு கோரினான் கணவன்.

பிரசவம் செய்வித்த பெண்மணிக்காக நன்றி கூற காத்திருந்தனர் தம்பதியர். இரவு வந்தது. அங்கேயே தூங்கினர். அவர்கள் கனவில் அந்தச் சிறு பெண் அம்பிகையாக வந்து, ‘‘நான் குணவதி அம்மன்’’ என்று தன் திருப்பெயரை கூறினாள். நல்ல பிள்ளை பெற உதவிய அம்மனை, ‘நல்ல பிள்ளை பெற்ற குணவதியம்மன்’ என்றே அழைத்தார்கள். இன்றும் சுகப்பிரசவம் ஆக வேண்டிக் கொண்டு, அது நிறைவேறியவர்கள், அப்படிப் பிறந்த குழந்தையோடு கோயிலுக்கு வந்து நன்றி தெரிவிப்பதைக் காணலாம்.

நெல்லை – திருச்செந்தூர் பிரதான சாலையில் செய்துங்கநல்லூர் என்னும் இடத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருநின்றியூர் – ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர்

கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட ஆலயம் இது. மூலவர் மகாலட்சுமீஸ்வரர், தேவாதி தேவர்கள் தினம் வந்து தொழுகிறார்கள் என்பது ஐதீகம். அம்பிகையின் பெயர் லோகாம்பிகை எனும் உலகநாயகி. திருமாலின் திருமார்பிலிருந்து நீங்காதிருக்கும் வரத்தை மகாலட்சுமி இத்தலத்து ஈசனை பூஜித்துப் பெற்றாள். எனவே லட்சுமி கடாட்சம் பெற இத்தலத்தை நோக்கி, பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆடி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. லட்சுமியின் பூரண அருள்பெற தாமரை இதழில் தேனூற்றி, ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில் இது.ஏனெனில், அனுஷம் நட்சத்திரத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான்.

மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் பாதையில் 7 கிலோ மீட்டரில் இத்தலம் உள்ளது.

மருதவனம் – காளி

சண்டாசுரனை அழிக்குமாறு தேவர்கள், பார்வதியிடம் முறையிட்டனர். இந்த இடமே இப்போதைய கண்டதேவி. இங்கு காளிதேவி எழுந்தருள, தேவர்கள் கட்டிய கோட்டையே தேவகோட்டை. தேவகோட்டையில் தங்கி காளி சண்டாசுரனை வதம் செய்தாள். அசுரனை வெற்றி கண்ட இடமே வெற்றியூர். தேவர்கள் காளியின் மீது பூத்தூவி வணங்கி வரவேற்ற தலம், பூங்குடி. இப்படி, ஒவ்வொரு தலத்திலும் தேவர்களால் வழிபடப்பட்டு, அசுரனை வதைத்த காளி, மருதவனத்தில் சொர்ணகாளி எனும் திருப்பெயரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறாள்.

மதுரையிலிருந்து 30 கி.மீதொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கொல்லங்குடி – ஸ்ரீவெட்டுடைய காளி

தன் அரசியான வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்காத உடையாள் என்ற கன்னிப்பெண், ஆங்கிலேய அரசால் அரியாக்குறிச்சி எனும் ஊரில் தலை வெட்டி எறியப்பட்டாள். உடையாள் வெட்டுப்பட்டதால் வெட்டுடையாள் என்றழைக்கப்பட்டாள். அங்கேயே அவளுக்கு சமாதி அமைத்தனர். சமாதியின் மேற்பரப்பில் காணப்பட்ட எழுத்துகள் காளிக்கு உரியனவாக இருந்தன. அதனால் காளிக்கு அங்கேயே தனிச் சந்நதி நிறுவினார். வேலுநாச்சியார் தன் பொருட்டு உயிரிழந்து காளியின் உருவெடுத்த வெட்டுடையாளுக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்து சுமங்கலியாக்கினார். இன்றும் மிகுந்த உக்கிரத்தோடு அமர்ந்து, மக்கள் குறைகளை தீர்த்து வைக்கிறாள் வெட்டுடையாள்.

சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி கிராமம் அமைந்துள்ளது.

The post முத்தாலங்குறிச்சி – குணவதியம்மன் appeared first on Dinakaran.

Related Stories: