6 ஆண்டுகளாக சுயநல போக்கில் ஆணவத்தாலும், பேராசையாலும் செயல்பட்டு வருபவர் எடப்பாடி: ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கடும் தாக்கு

தஞ்சை: ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் வைத்திலிங்கம் இளைய மகன் திருமண விழா தஞ்சையில் இன்று நடந்தது. விழாவில், மணமக்களை வாழ்த்தி ஓ.பன்னீர்செல்வம் பேசியது: எம்ஜிஆர் அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக தான் துவக்கினார். எல்லோருக்கும் விரைவாக அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த இயக்கத்தை வழி நடத்தினர். இன்றைக்கு அது மாறுபட்டிருக்கிறது. மீண்டும் அந்த சூழல் வர வேண்டும் என்று நாங்கள் செல்லும் இடம் எல்லாம் நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், ஒருங்கிணைய வேண்டும் என்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்று சொன்னால் தொண்டர்கள் இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசியது: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்காக அமமுக, அதிமுகவுடன் (ஓபிஎஸ் அணி) கைகோர்த்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக ஒருவர் சுய போக்கில் ஆணவத்தாலும், பேராசையாலும் செயல்பட்டு வருகிறார். திருமணம் என்பது ஒரு நல்ல தொடக்கமாக அமையும். பழைய நண்பர்களையும், உறவினர்களையும் சந்திப்பதற்கு வைத்திலிங்கம் இல்ல திருமணம் இன்றைக்கு ஒரு தொடக்கமாக அமைந்திருக்கிறது.

இது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இது ஒரு இயற்கையாக நிகழ்ந்த இணைப்பு தான். இந்த இணைப்பு வரும் காலத்தில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கு நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நட்புடன் செயல்படுவோம்.

The post 6 ஆண்டுகளாக சுயநல போக்கில் ஆணவத்தாலும், பேராசையாலும் செயல்பட்டு வருபவர் எடப்பாடி: ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: