கடன் தொல்லையால் விபரீதம் ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

*மல்லசமுத்திரம் அருகே சோகம்

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் அருகே, கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (65). இவரது மனைவி சிந்தாமணி (52). இவர்களுக்கு ஜெயபிரகாஷ், நந்தகுமார் (35), கோபி(30) ஆகிய மகன்களும் சசிரேகா என்ற மகளும் இருந்தனர். இவர்களில் ஜெயபிரகாஷ், சசிரேகா ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தற்கொலை செய்து கொண்டனர். கோபி திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நடேசனுக்கு சர்க்கரை அளவு அதிகரித்து, உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

சிந்தாமணி அதே பகுதியில் உள்ள நூல் மில்லில் கூலி வேலை செய்து வந்தார். நந்தகுமார் தச்சு தொழில் செய்து வந்தார். மேலும் லாரி டிரைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், நேற்று காலை வெகு நேரமாகியும், நடேசனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது, நடேசன், சிந்தாமணி, நந்தகுமார் ஆகியோர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுபற்றி எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர், 3 பேரின் உடலையும் கைப்பற்றி விசாரித்தனர். அதில், நடேசன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ செலவுக்காக அதிகளவில் பணம் தேவைப்பட்டதால் அதிகளவில் நந்தகுமார் கடன் வாங்கியுள்ளார். மேலும், மகளிர் சுய உதவிக்குழுவில் அதிகம் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், நந்தகுமாருக்கு கையில் அடிபட்டதால், கடந்த 6மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் வீட்டு செலுவுகளை சமாளிக்க முடியாமலும், கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தவும் முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இதனிடையே, பணம் கொடுத்தவர்களும் அடிக்கடி பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த நடேசன், சிந்தாமணி, நந்தகுமார் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 3 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தில் 3பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உருக்கமான கடிதம் சிக்கியது

தற்கொலை செய்து கொண்ட நடேசன் வீட்டில், போலீசார் சோதனை நடத்திய போது, ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘எங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. கடன் வாங்கிய நிலையில் அதனை திருப்பி செலுத்த முடியாததால், தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது இளைய மகன் புதைக்கப்பட்ட இடத்தில், எங்களது உடல்களையும் புதைக்க வேண்டும்,’ என எழுதி இருந்தது.

The post கடன் தொல்லையால் விபரீதம் ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: