இயேசுவும் அவரது தந்தையும்

கிறிஸ்துவம் காட்டும் பாதை

(யோவான் 14:1-15)

கடவுளே இயேசுவின் தந்தை.

இயேசு கிறிஸ்து கடவுளையே தந்தையாகக் கொண்டவர். இதனால் அவர் பேறு பெற்றவராகின்றார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சிறப்பு வாய்ந்ததாகத் திருமறை கூறுகிறது. உலகக் கிறிஸ்தவர்களின் ஆழமான நம்பிக்கையும் இயேசு கிறிஸ்து. எந்த ஒரு ஆணின் துணையின்றி அன்னை மரியாளின் வயிற்றில் பிறந்தார் என்பதாகும். அவர் தூய ஆவியினால் கருவாக உருவானார்.

இந்த நம்பிக்கையில் கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றெடுத்து ஆளாக்க வேண்டுமென்றால், அன்னை மரியாளுக்கு எத்தனை உளவலிமை தேவைப்பட்டிருக்கும் என்பது எண்ணிப்பார்க்கவே வியப்பாக உள்ளது. இந்த மாபெரும் உண்மையை ஏற்க மறுத்தவர்களின் இழி சொற்களையெல்லாம் புறந்தள்ளி கடவுள்தான் தனது தந்தை எனும் உறுதியில் நிலைக்க இயேசுவுக்குத்தான் எத்தனை உளவலிமை?

இயேசு தமது பன்னிரண்டாவது வயதில் எருசலேமில் தன்னைக் காணவில்லையென்று தேடிவந்த பெற்றோரிடம் ‘‘நான் எனது தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?’’ என்றார். (லூக்கா 2:49).

அவர் கற்பித்த மன்றாட்டில்கூட ‘‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே’’ (மத்தேயு 6:9). என்று அழைத்துள்ளார். இயேசுவுக்கும் அவரது தந்தையாகிய கடவுளுக்கும் இருந்த உறவு மிகவும் ஆழமானதாகும். இதை உணர்த்தும் வகையில் ‘‘என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்’’ என்று கூறியுள்ளார். அவர் தமது சீடரிடம் ‘‘என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா’’ எனக் கேட்டார் (யோவான் 14: 9-10).

இயேசுவுக்கும் கடவுளாகிய தந்தைக்கும் இருந்த உறவுநிலைத் தன்மையோடு இருந்ததுடன் அது பிரிக்கமுடியாததாகவும் இருந்தது. ரோம ஆளுனரான பிலாத்து இயேசுவுக்கு உயிர்ப்பிச்சை அளிக்க வந்ததை ஏற்க மறுத்தார். தவறான உலக அதிகாரங்களுக்குத் தமது கீழ்ப்படியாமையை வெளிப்படுத்தினார். தன் மரணத்தின் போதுகூட ‘‘தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்’’ (லூக்கா 23:45) தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய இயேசு.

ஒரு யூத இளைஞராகவும் தாய்க்குத் தலைமகனாகவும் இருந்த இயேசுவுக்கு சொந்த விருப்பம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் தமது தந்தையாகிய கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதைத்தான் தன் விருப்பமாகக் கொண்டு இயங்கினார். தனது தந்தையின் விருப்பம் எது என்பதையும் நாசரேத்து ஊரில் அறிக்கையாகக் கூறினார். ‘‘ஆண்டவருடைய ஆவி என் மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்’’ எனும் எசாயா இறைவாக்கினரின் கூற்றை தமதாக்கிக்கொண்டு ‘‘நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று என்று கூறி கேட்டவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.’’ (லூக்கா 4:16-22).

மேற்கண்டவற்றை நடைமுறைப்படுத்தியதால்தான் அன்றைய அதிகார வர்க்கம் அவர் மீது விமர்சனங்களை வைத்தது, குற்றப்படுத்தியது, கல்லெறிந்தது, பலமுறை கொலை செய்ய முயன்றது, இறுதியில் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றது. இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்தல் இயேசு தமது சீடர்களிடம் ‘‘என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என் மீது அன்புகொண்டுள்ளார். என் மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்புகொள்வார், நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்’’ என்றார். (யோவான் 14:21). இக்கூற்றில் பெரும் உண்மை அடங்கியுள்ளது.

அதாவது இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்துபவர் மீது அவரும் கடவுளும் அன்புகொள்கின்றனர். இதற்கு மதமோ திருச்சபை உறுப்பினத்துவமோ அவசியமாக
இருக்கவில்லை. கடவுளும் இயேசு கிறிஸ்துவும் உலக மக்கள் அனைவருக்கும் உரியவர்கள். உலக மக்கள் யாவர் மீதும் எந்தப் பாகுபாடும் இன்றி அன்பு செலுத்துபவர்கள். இயேசுவின் கட்டளைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ‘‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்’’ என்பதாகும். மேலும் ‘‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’’ என்றார். (யோவான் 13:34). அன்பு புரட்சிகரமானது. அது கத்தியின்றி இரத்தமின்றி உலகை மாற்றும் ஆற்றல் உடையது.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post இயேசுவும் அவரது தந்தையும் appeared first on Dinakaran.

Related Stories: