பாண்டுரங்கா பண்டரிநாதா!

தென்னாங்கூர்

இறை வழிபாட்டுடன், பக்தர்களின் இரைத் தேவையைத் தீர்ப்பதையும் தன் தினசரி கடமையாகக் கொண்டவன் அந்த பக்தன். அவனுடைய பொது நலனைப் பாராட்டும் வகையில் அவன் வழிபடும் பாண்டுரங்கன், அவனுடைய வீட்டிற்கே வந்து அவன் அளிக்கும் பூஜையையும் பிரசாதத்தையும் நேரடியாகவே ஏற்றுக் கொள்வார். முறையாக பூஜையை ஆரம்பித்தபோது வாசலில் அன்னதானம் பெறவேண்டி காத்திருந்தவர்கள் அவனுடைய கவனத்தை ஈர்த்தார்கள்.

உடனே அவன் பாண்டுரங்கனிடம், ‘‘கொஞ்சம் அப்படியே நில்லுங்க சாமி, நான் அவங்களை கவனிச்சுட்டு வர்ரேன்” என்று சொல்லிவிட்டு வாசல் பக்கம் போய்விட்டான். அவன் சொன்னானே என்பதற்காக பாண்டுரங்கன் நின்றபடியே காத்திருந்தார். தன்னைக்கூட கவனிக்காமல் தன் அடியார்கள் மீது அன்பைப் பொழியும் அந்த பக்தனின் பொதுநல உள்ளத்தைப் பாராட்டும் வகையாக, அந்தப் பாண்டுரங்கன் அதே நின்ற கோலத்தில் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் தருகிறார், தென்னாங்கூரில்.

இவ்வூரில் நடுநாயகமாக, பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது இந்த பாண்டுரங்கன் – ரகுமாயி ஆலயம். வட இந்திய பூரி ஜெகந்நாதர் கோயில் வடிவமைப்பைப் போன்று விண்ணை முட்டும் கோபுரம், பார்ப்போர் கண்களைக் கவரக் கூடியது. கோபுரத்தின் உயரம் தொண்ணூற்று ஐந்தடி. கோயிலில் உள்ள கதவுகள் எல்லாம் தேக்கு மரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டவை. மூலவர் இருக்கும் இடத்திலுள்ள கதவுதான் உலகத்து கோயில்களிலேயே வெள்ளியினால் செய்யப்பட்ட மிகப்பெரிய கதவு என்கிறார்கள். நுழைவாயிலை அடுத்து மூன்று மண்டபங்களும் அதற்குப்பின்னால் கர்ப்பக் கிரகமும் அமைக்கப்பட்டுள்ளன.

கர்ப்பக் கிரகத்தில், ஆளுயர வடிவில் பாண்டுரங்கன் – ரகுமாயி, மூலவர்கள் வேத ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஆலயத்தின் முகப்பு மண்டபத்தில் சித்திரங்கள் புதுமையான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணனின் லீலா விநோதங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மனதை கொள்ளை கொள்வன. மண்டபத்தின் மேற்கூரையில் தசாவதாரக் காட்சிகளை வட்ட வடிவ ஓவியங்களாக அமைத்துள்ளார்கள். ‘மியூரல்’ என்கிற நவீன பாணியில் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் இவை.

கேரளக் கோயில்கள், பலவற்றில் கருவறையைச் சுற்றி இதுபோன்ற ஓவியங்களைக் காணலாம். விஸ்வரூப மூர்த்திகளாக விளங்கும் பாண்டுரங்கன் – ரகுமாயிக்குக் கீழே, தனியாக அலங்கரிக்கப்பட்ட, அவர்களுடைய மிகச் சிறிய விக்ரகங்கள் விளங்குகின்றன. இவைதான் இக்கோயிலின் உற்சவ மூர்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலுக்குக் கொடி மரம் இல்லை. ஒரு காவிக் கொடியைக் கையில் ஏந்தி ‘ராமா ராமா’ என்று சொல்லியவாறு கோயிலைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் பக்தர்கள்.

இது ஒருவகை பிரார்த்தனை என்கிறார்கள். இல்லையில்லை, பக்தி வெளிப்பாடு என்கிறார்கள் வேறு சிலர். நேரம் காலம் பார்க்காமல் மணிக்கணக்காக பக்தர்கள் கால் நோகாமல், மனம் சலிக்காமல், ராம ஜபம் சொல்லும் வாய் வலிக்காமல் மணிக் கணக்காகச் சுற்றி வருகிறார்கள் என்றால் இது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையான பக்திதான் என்றே நெகிழ்ச்சியுடன் உணர முடிகிறது.

ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடரான ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பெரு முயற்சியால் உருவான இக்கோயிலில், அவர் பாண்டுரங்கனை வழிபடுவது போன்ற ஓவியத்தைப் பார்க்கும் போது கண்களில் நீர் துளிர்க்கும். கங்கை நதியில் ஜல சமாதியாகிவிட்ட மகான் ஹரிதாஸ் கிரி, அவர்களுடைய பக்தி தோய்ந்த இறுதி காலத்தை நினைவுக்குக் கொண்டுவரும். காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் தென்னாங்கூர். காஞ்சியில் இருந்து 34 கி.மீ. வந்தவாசியில் இருந்து 6 கி.மீ. உத்திரமேரூரில் இருந்து 22 கி.மீ. தொலைவு.

தொகுப்பு: சுபஹேமா

The post பாண்டுரங்கா பண்டரிநாதா! appeared first on Dinakaran.

Related Stories: