தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்திகளில் மனு அளிக்க கலெக்டர் வலியுறுத்தல்

ராமநாதபுரம், ஜூன் 7: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாகளிலும் ஜமாபந்தி நடந்து வருவதால் அந்தந்த பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார். கடலாடி மற்றும் ராமநாதபுரம் தாலுகாகளில் ஜமாபந்தி நேற்று துவங்கியது. கடலாடி தாலுகாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையிலும், ராமநாதபுரத்தில் டி.ஆர்.ஓ கோவிந்தராஜலு தலைமையிலும் துவங்கியது. கடலாடி தாலுகாவில் முதல்நாள் எஸ்.தரைக்குடி உள்வட்டத்தை சேர்ந்த டி.எம்.கோட்டை, டி.வேப்பங்குளம், அவதாண்டை, ஏ.நெடுங்குளம், டி.கரிசல்குளம், கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி மற்றும் எஸ்.தரைக்குடி பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

46 மனுக்கள் பெறப்பட்டு மேல்நடவடிக்கைக்கு உரிய அலுவலர்களுக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். அப்போது கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறும்போது, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து உடனடி தீர்வு வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஒரு வார காலம் நடைபெறும் இந்த ஜமாபந்தி முகாமில் அந்தந்த வருவாய் உள்வட்டத்தை சேர்ந்த, பஞ்சாயத்துக்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மனு அளித்து தீர்வு பெறலாம்.

மேலும் வி.ஏ.ஓ அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான அடங்கல், சாகுபடி விவரம், பட்டா மாறுதல், வறட்சி நிவாரணம், தண்ணீர் தீர்வை, சிட்டா, நத்தம் கணக்கு வருவாய் தொடர்பான பதிவேடு, கண்மாய்களின் விபரம், நிலவர் உள்ளிட்ட அனைத்து வகை பதிவேடுகள் தணிக்கை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து தீர்வு காணலாம்.

மேலும் உதவி தொகை உள்ளிட்ட அரசு உதவி திட்டங்கள் தேவைப்படும் பொதுமக்கள், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்து உரிய நிவாரணம் பெற்று பயன்பெறலாம் என்றார். இம்முகாமில் புள்ளியியல் துறை துணை இயக்குனர் ஜெய்சங்கர், நில அளவை உதவி இயக்குனர் பொன்னழகு, தாசில்தார் ரெங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோன்று ராமநாதபுரம் தாலுகாவில் பெருங்குளம் உள்வட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் டி.ஆர்.ஓ கோவிந்தராஜலு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

The post தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்திகளில் மனு அளிக்க கலெக்டர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: