எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 17 சவரன் கொள்ளையடித்தவர் சிக்கினார்: போலீசார் விசாரணை

சென்னை, ஜூன் 7: சென்னை-பழனி-பாலக்காடு எக்ஸ்பிரசில் சென்ற சென்னை பெண் பயணியிடம் 17 சவரன் நகைகளை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சென்னை அய்யப்பன்தாங்கல் பிரத்ஸ்பெல்லா ரெஸ்டா பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி சூர்யா (67). இவர் தனது உறவினர்களுடன், பொள்ளாச்சி செல்வதற்காக சென்னை-பழனி-பாலக்காடு எக்ஸ்பிரசில், நேற்று முன்தினம் பயணித்தார். ஏ-1 ஏசி பெட்டியில் பயணித்த நிலையில், அந்த ரயில் நேற்று அதிகாலை 2 மணிக்கு, சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அப்போது அந்த பெட்டியில் இருந்து சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறங்கினார். இதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், பிளாட்பார்மில் ரோந்து பணியில் இருந்த சேலம் ரயில்வே போலீசாரிடம், ‘‘அந்த நபர் ஏ-1 பெட்டியில் பயணிக்கவில்லை, அவர் மீது சந்தேகம் இருக்கிறது,’’ எனத்தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், ரயிலில் இருந்து இறங்கி, பிளாட்பார்மில் வேகமாக நடந்துச் சென்ற நபரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவர் கையில் வைத்திருந்த பையை பரிசோதித்தனர். அதனுள் லேடீஸ் ஹேண்ட்பேக் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் அந்த பேக் யாருடையது என விசாரித்தனர். அதற்கு அவர் முறையாக பதிலளிக்காததால், அந்த பையை திறந்து பார்த்தனர். அதனுள் 17 சவரன் நகையும், ஒரு செல்போனும் இருந்தது. தொடர் விசாரணையில், ஏ-1 பெட்டியில் பயணித்த பெண்ணிடம் இருந்து 17 சவரன் நகை, செல்போனை திருடிக்கொண்டு, தனது பேக்கில் போட்டுக் கொண்டு இறங்கி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர், தனது பெயர் மற்றும் முகவரியை மாற்றி மாற்றி கூறினார். இதனால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர், பிரபல நகை பறிப்பு கொள்ளையனான திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த முத்துராமன் (46) என தெரியவந்தது. இதனிடையே, சென்னை-பழனி-பாலக்கோடு எக்ஸ்பிரஸ், ராசிபுரம் பகுதிக்கு சென்றபோது சூர்யா, தனது 17 சவரன் நகையுடன் பையை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக, ரயிலில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தார். பின்னர், அவரை அங்கேயே இறங்கச் செய்து, சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை சேலம் வந்த அவர், ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், அவரிம் நகை ஒப்படைக்கப்பட்டது. போலீசில் சிக்கியுள்ள பிரபல கொள்ளையன் முத்துராமன் மீது, ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளன. அதனால், அவரிடம் ரயில்வே போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 17 சவரன் கொள்ளையடித்தவர் சிக்கினார்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: