மீஞ்சூரில் வடகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஜூன் 7: வடகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற வடகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, தினமும் காலை, மாலை வேளைகளில் சிம்ம வாகனம் சூர்ய பிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம், அனுமந்த வாகனம், நாகவாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

கடந்த 2ம் தேதி கருடசேவை உற்சவமும், 5ம் தேதி பெருமாள் திருகல்யாண வைபவமும் நடந்தது. முக்கிய விழாவாக தேரோட்டம் நேற்று நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அமர்த்தப்பட்டு வீதியுலா நடந்தது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். ஏராளமான பக்தர்கள், தேரோட்டத்தை கண்டுகளித்தனர். மீஞ்சூர், பழவேற்காடு, பொன்னேரி, மணலிபுதுநகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கண்டுகளித்தனர். முக்கிய வீதிகளான தேரடி தெரு, ஐயப்பன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. வழிநெடுக பக்தர்களுக்கு வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக, தொண்டு நிறுவனத்தினர், நீர், மோர், ரஸ்னா, அன்னதானம் உள்ளிட்ட உணவுகளை வழங்கினர். இதில், மீஞ்சூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post மீஞ்சூரில் வடகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: