ஊத்துக்கோட்டை, திருத்தணியில் ஜமாபந்தி நிகழ்ச்சி

ஊத்துக்கோட்டை, ஜூன் 7: ஊத்துக்கோட்டை, திருத்தணியில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் 1432 – ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பீ ஜான்வர்கீஸ் தலைமை தாங்கினார். துணை ஆட்சியர் சுபலட்சுமி, தாசில்தார் வசந்தி, தனி தாசில்தார் லதா, ஒன்றிய செயலாளர்கள் பி.ஜெ.மூர்த்தி, டி.கே.சந்திரசேகர், பொன்னுசாமி, பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜமாபந்தியின் முதல் நாளான நேற்று ஊத்துக்கோட்டை, தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சியகரம், பேரண்டூர், பனப்பாக்கம், சென்னங்காரணை, தொளவேடு, தண்டலம், பருத்திமேனி, தும்பாக்கம், காக்கவாக்கம் ஆகிய 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனைப்பட்டா 30, பட்டாமாற்றம் 48 பேரும், இதர மனுக்கள் 28 பேர் என 106 மனுக்களை வழங்கினர் . இதில் 5 மனுக்கள் ஏற்க்கப்பட்டு மீதமுள்ள 101 மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் டில்லிராணி, உதவி இயக்குனர் குமரவேல், வட்ட வழங்கல் அலுவலர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தலைமை எழுத்தர் ஹேமகுமார் நன்றி கூறினார்.

திருத்தணி: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருத்தணி வட்டத்துக்குட்பட்ட ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் 1,432 திருத்தணி வருவாய் கோட்டாட்சியரும் ஜமாபந்தி அலுவலக தீபா தலைமையில் நடந்தது. திருத்தணி வட்டாட்சியர் பொறுப்பு உமா அனைவரையும் வரவேற்று பேசினார். வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ராமன், நிலவரித் திட்ட வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் டி.சி கண்டிகை, கேஜி கண்டிகை உள்ளிட்ட 8 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 28 பேர் கலந்து கொண்டு ஜமாபந்தி அலுவலரிடம் மனு செய்தனர். இதில் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு இதில் இரண்டு நபர்களுக்கு கிராம நத்தத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது மற்றவை பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழி, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சந்திரசேகர், திருத்தணி மண்டல துணை வட்டாட்சியர் ரீட்டா, செறுகனூர் வருவாய் ஆய்வாளர் வித்யாலட்சுமி, வேளாண்மை பொறியியல் துறை உதவியாளர் உமாபதி, துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தி இன்னும் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் மிஸ்ஸிங் குப்பைக்கு போகும் மனுக்கள் : இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட கலெக்டர் போன்ற அதிகாரிகளால் நடத்தப்படும் ஜமாபந்தி மற்றும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மட்டுமே மற்ற துறை அலுவலர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். வருவாய் கோட்டாட்சியர் போன்ற அதிகாரிகள் நடத்துகின்ற ஜமாபந்தி மக்கள் குறைதீர்க்க நாள் கூட்டத்திலோ பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்கின்றனர்.

இதனால், பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது உரிய விளக்கம் பெறப்படாமலே மனுக்கள் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து உரிய பதிலும் வருவதில்லை, கிடைப்பதும் இல்லை. இதனால் மனுக்கள் குப்பைக்கே செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இனிவரும் காலங்களில், அனைத்து துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

திருவள்ளூர்: இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். முதல்நாளில் ஆர்கே பேட்டை குறுவட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பங்கேற்று பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப் பட்டா உட்பட பல்வேறு சான்றுகள் மற்றும் உதவிகள் கேட்டு 87 மனுக்கள் வழங்கினர். மனுக்கள் மீது அரசு அலுவலர்கள் உடனடியாக பரிசீலனை மேற்கொண்டு தகுதியான இருவருக்கு பட்டா மாற்றம் சான்றுகள் வழங்கினர். ஜமாபந்தி மேலாளர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, தலைமை சர்வேயர் ஜெயகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் விஜயா, வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், பாண்டியன், கனிமொழி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம் இணைந்து ஜமாபந்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) ரவி தலைமை வகித்தார். தாசில்தார் அருண்குமார் அனைவரையும் வரவேற்றார். பள்ளிப்பட்டு குறு வட்டத்தில் வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் பங்கேற்று 40 மனுக்களை வழங்கினர். இதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சேகர், வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஜமாபந்தி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

The post ஊத்துக்கோட்டை, திருத்தணியில் ஜமாபந்தி நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: