ஆதிதிராவிட மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் கேட்டு நகரமன்ற துணைத் தலைவர் கலெக்டரிடம் மனு

திருவள்ளூர், ஜூன் 7: திருவேற்காடு நகராட்சி வார்டு எண் 14ல் உள்ள பெருமாள் கோயில் தெரு, பால்வாடி தெரு ஆகிய 2 தெருக்கள் உள்ளன. இங்கு, சுமார் 160 வீடுகளில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே நிரந்தரமாக வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.ஆனந்தி ரமேஷ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லயன் டி.ரமேஷ், டி.ஜெயக்குமார், டி.பாபு சேகர், எஸ்.மாரிமுத்து உள்பட 100 க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14ல் பெருமாள் கோயில் தெரு மற்றும் பால்வாடி தெரு ஆகிய இரு தெருக்கல் உள்ளது.

இங்கு, சுமார் 160க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த குடும்பங்கள், வீடுகள் அமைத்து சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீகமாக வசிக்கின்றனர். கடந்த 1995ல் அடைமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் கூவம் ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் வீடுகள் இருந்ததால் தண்ணீர் செல்வதற்கு தடையாய் இருந்தன. வீடுகளை அரசாங்கத்தின் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்களுக்கு மாற்று இடம் தரப்பட்டது.

அதேவேளையில் அப்போதைய மாவட்ட கலெக்டரும், அப்போதைய கோட்டாட்சியரும், நேரடியாக எங்களுடைய பகுதிக்கு வந்து பார்வையிட்டு அரசாங்க பதிவேட்டில் 1907ன் கணக்கின்படி இந்த பகுதி நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. ஆனாலும், நீங்கள் வசிக்கின்ற பகுதி ஆற்றிலிருந்தும், மேம்பாலத்திலிருந்தும் 30 அடி உயரத்திற்கு மேல் உங்களுடைய குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த வீடுகளால் தண்ணீர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என எங்கள் பகுதியை விட்டுவிட்டுச் சென்றனர். எனவே, அப்பகுதி மக்கள் நிரந்தரமாக இருக்கும் இடத்திலேயே அச்சமின்றிவாழ ஆவண செய்யுமாறு நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.ஆனந்தி ரமேஷ் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார். அதேபோல், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கு.ஜெயக்குமார், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆவடி சா.மு.நாசர் ஆகியோரிடமும் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

The post ஆதிதிராவிட மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் கேட்டு நகரமன்ற துணைத் தலைவர் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: