ஓராண்டில் ₹145.50 கோடியில் திட்டப்பணிகள்

ஓசூர், ஜூன் 7: ஓசூரில் ஓராண்டில் ₹145.50 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், மாதிரி நகர திட்டத்தின் கீழ் ₹33.98 கோடியில், ஏரிகளுக்கிடையேயான கால்வாய்களை 4 கி.மீ தூரத்திற்கு தூர்வாருதல், கல்கேரி, கர்னூர் மற்றும் அந்திவாடி ஏரியை மேம்பாடு செய்தல், ராமநாயக்கன் ஏரியை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூலதன மானிய நிதியின் கீழ் ₹25.30 கோடியில் நவீன வணிக வளாகம், நூலகம் மற்றும் அறிவுசார் மையம், நீவின எரிவாயு தகன மேடை மற்றும் நீர்நிலைகள் மேம்பாடு ஆகிய பணிகள் நடந்து வருகிறது. மேலும், ₹5.88 கோடியில் எம்ஜிஆர் மார்கெட்டில் நவீன வணிக வளாகம் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படுகிறது.

மேலும், அம்ரூத் 20 திட்டத்தின் கீழ் ₹1.06 கோடியில், காலேகுண்டா குளம் மற்றும் வெங்கடகிரி அய்யன் ஏரி மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளது. கல்வி நிதியின் கீழ் ₹6.50 கோடியில் பாரதியார் பள்ளி, பஸ்தி பள்ளி, அலசநத்தம் பள்ளி, காமராஜ் காலனி தமிழ் பள்ளி, கன்னடம் மற்றும் தெலுங்கு பள்ளிகள், ஜூஜூவாடி பள்ளி, மூக்காண்டப்பள்ளி, அரசனட்டி பள்ளி மற்றும் சீதராம்மேடு ஆகிய 9 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் அமைத்தல் பணி முடிக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ₹2.40 கோடியில் ஆவலப்பள்ளி மற்றும் அப்பாவு நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், மாநில நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ₹10.44 கோடியில் தெருவிளக்கு, எல்இடி மாற்ற பணிக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ₹3.96 கோடியில் சமுதாய கழிப்பிடம் 3, பொது கழிப்பிடம் 3, சிறுநீர் கழிப்பிடம் 1, எம்ஆர்எப் 2, பையோ மைனிங் 1 ஆகிய 10 பணிகள் நடைபெற்று வருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ₹7.21 கோடி மதிப்பீட்டில் 18 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு மானிய தொகை ₹1.40 கோடி, பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ₹5.81 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ₹1.13 கோடியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் 4, மழைநீர் சேகரிப்பு பணி 1, நுண்ணுயிர் செயலாக்க மையம் பராமரிப்பு 1 என 6 பணிகள் நடைபெற்று வருகிறது. நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹5.39 கோடியில் 15 கி.மீ நீளத்திற்கு 60 தார் சாலைகள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ₹10.21 கோடியில் 16 கி.மீ நீளத்திற்கு 119 தார் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஓசூர் மாநகராட்சியில் ஓராண்டில் ₹145.50 கோடி மதிப்பில் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ், ₹30 கோடியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க வருகிற 28ம் தேதி, ஒப்பந்தப்புள்ளி அழைப்பு கோரப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் இதுவரை 23 ஆயிரம் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் மொத்தம் இதுவரை 11,100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் சினேகா தெரிவித்தார்.

The post ஓராண்டில் ₹145.50 கோடியில் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: