முத்தமிழ் கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, ஜூன் 7: முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் கலை விருகள் பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலை பண்பாட்டுத் துறையின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2002-2003ம் ஆண்டு முதல் 2021-2022ம் ஆண்டு வரை, 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டுக்கான கலை விருதுகள், கிருஷ்ணகிரி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்க, கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளமணி விருது 18 வயதும், அதற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை வளர்மணி விருது 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை சுடர்மணி விருது 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை நன்மணி விருது 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கும், கலை முதுமணி விருது 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக்கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள், இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

இதற்கு முன்னர் மாவட்ட விருதுக்கு விண்ணப்பித்திருந்த கலைஞர்கள், 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டு விருது தேர்விற்கு தங்களது ஒப்புதல் வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3, கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம் பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்- 636 302 என்ற முகவரிக்கு வருகிற ஜூலை மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427 -2386197 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

The post முத்தமிழ் கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: