`நன்றாக படித்து ஐஏஎஸ் ஆவேன்’ என கண்ணீர் மல்க தெரிவித்த நரிக்குறவ மாணவியை இருக்கையில் உட்காரவைத்து பாராட்டிய கலெக்டர்: திருப்பத்தூரில் நெகிழ்ச்சி

திருப்பத்தூர்: நன்றாக படித்து ஐஏஎஸ் ஆவேன் என கண்ணீர் மல்க தெரிவித்த நரிக்குறவ மாணவியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தனது இருக்கையில் உட்கார வைத்து பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் சமுதாயத்தை சேர்ந்த 51 பேருக்கு ஏற்கனவே எஸ்டி சாதி சான்று வழங்கப்பட்டது. மேலும் 10 பேருக்கு எஸ்டி சாதி சான்று வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி எஸ்டி சாதி சான்று வழங்கினார்.

அப்போது திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி மெய்விழி என்பவர் கலெக்டரிடம், இந்த சான்றிதழ் எனது பெரிய சொத்தாக உள்ளது. இதை வைத்து நன்றாக படித்து, மாநிலத்திலேயே நரிக்குறவர் இனத்தை சேர்ந்த முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக, மாவட்ட கலெக்டராக நான் வருவேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இதை கேட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கண் கலங்கினார். பின்னர், தனது இருக்கையில் இருந்து எழுந்து, ஐஏஎஸ் ஆவதற்கு முன்பு என்னுடைய சேரில் நீ அமர வேண்டும். கலெக்டர் ஆவதற்கு முதல் வாழ்த்தை நான் தெரிவித்து கொள்கிறேன் என கூறி அந்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து பாராட்டினார். இதை பார்த்த நரிக்குறவர்கள் அனைவரும் கண் கலங்கினர்.

அதேபோல், கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அனைவரையும் இச்சம்பவம் நெகிழ்ச்சியடைய செய்தது. நரிக்குறவ சமுதாய மக்கள், தங்களுக்கு எஸ்டி சாதி சான்று வழங்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகரன், கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோருக்கு பவளமணி மற்றும் பாசிமணி மாலைகளை அணிவித்தனர்.

The post `நன்றாக படித்து ஐஏஎஸ் ஆவேன்’ என கண்ணீர் மல்க தெரிவித்த நரிக்குறவ மாணவியை இருக்கையில் உட்காரவைத்து பாராட்டிய கலெக்டர்: திருப்பத்தூரில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: