கவர்ச்சி திட்டங்களை அறிவித்து 41.88 லட்சம் ரூபாய் மோசடி; தம்பதி உள்பட 3 பேர் கைது: 45 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பறிமுதல்

கோவை: யூ டியூப் சேனலில் கவர்ச்சியாக விளம்பரம் அறிவித்து 44 பேரிடம் ரூ.41.88 லட்சம் வசூலித்து மோசடி செய்த கோவை தம்பதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 45 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10,250 பணம், ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா (38). இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப் சேனலை துவங்கினர்.

அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவுசெய்து வந்தனர். இந்நிலையில் தம்பதியினர் தங்களது யூடியூப் சேனலில் ரூ.1,200 முதலீடு செய்தால், 20 நாட்களில் மூலதன தொகையுடன் ரூ.300 சேர்த்து ரூ.1,500 ஆக திருப்பி தரப்படும் என்று அறிவித்தனர். இதை நம்பிய பலர் தம்பதி கூறிய வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தினர்.ஆனால் தம்பதி அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மேலும் தம்பதி தங்களது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டனர்.இது குறித்து, பணம் முதலீடு செய்த கோவை பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா (30) கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த தம்பதியினர் 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா, இவர்கள் இருவருக்கும் உதவிய அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10,250 பணம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post கவர்ச்சி திட்டங்களை அறிவித்து 41.88 லட்சம் ரூபாய் மோசடி; தம்பதி உள்பட 3 பேர் கைது: 45 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: