கணவரை விவாகரத்து செய்த இளம்பெண் அடித்துக் கொலை: 2 குழந்தைகளின் தந்தை கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் ஓட்டல் அறையில் வைத்து ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வாடானப்பிள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெசில் ஜலீல் (36). அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவருக்கும், பாலக்காடு அருகே உள்ள திருநெல்லாயி பகுதியை சேர்ந்த லின்சி (33) என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. லின்சி கணவனை விவாகரத்து செய்துவிட்டார்.

இருவரும் திருச்சூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அடிக்கடி 2 பேரும் வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக சுற்றி வந்து உள்ளனர். இதற்கான பணத்தை லின்சி தான் செலவழித்து வந்து உள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் 2 பேரும் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

அப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட செலவு தொடர்பான விவகாரத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜலீல், லின்சியை தாக்கி தலையிலும், வயிற்றிலும் காலால் உதைத்து உள்ளார். இதில் அவர் மயக்கமடைந்தார். ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரது வீட்டினருக்கு போன் செய்து குளியலறையில் லின்சி மயக்கம் போட்டு விழுந்ததாக கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து லின்சியின் உறவினர்கள் அவரை மீட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொச்சி எளமக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் லின்சியை ஜலீல் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கணவரை விவாகரத்து செய்த இளம்பெண் அடித்துக் கொலை: 2 குழந்தைகளின் தந்தை கைது appeared first on Dinakaran.

Related Stories: