ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க முடியாது; ரயில்வே உயர் அதிகாரிகள் திட்டவட்டம்..!!

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க முடியாது என உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒடிசா ரயில் விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை அளித்த குழுவில் இடம்பெற்ற ரயில்வே உயர் அதிகாரி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் யாரும் எளிதில் செல்ல முடியாது. சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல இரண்டு பேரிடம் மட்டும் இரு தொகுதி சாவிகள் இருக்கும்.

ரயில் நிலைய மேலாளர், சிக்னல் பராமரிப்பாளர் இருவரிடமும் உள்ள சாவிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தியே திறக்க முடியும். மிகவும் பாதுகாப்பான சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியாது என்று தெரிவித்தார். மேலும் பலத்த பாதுகாப்புடன் உள்ள சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து எந்த சீர்குலைவையும் செய்ய முடியாது. ரயில்வே சிக்னல்கள் பற்றிய அறிவு இல்லாத யாராலும் சதி வேலையில் ஈடுபட முடியாது என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

ரயில் சிக்னல் வயர்களில் நாசவேலை செய்தால் சிக்னல் விளக்கு சிவப்பாகிவிடும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 275பேர் உயிரிழந்தனர். சுமார் 1199 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post ஒடிசா ரயில் விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க முடியாது; ரயில்வே உயர் அதிகாரிகள் திட்டவட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: