காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் பேனர்கள், பாதகைள் வைப்பதற்கு அனுமதி பெறவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் அடிப்படையில் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அமைப்பது குறித்த வழிகாட்டுதல்களின்படி, விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அமைப்பதற்கு 15 தினங்களுக்கு முன்பு ஆணையருக்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சார்ந்த காவல் ஆய்வாளரிடமிருந்து தடையின்மை சான்றுபெற்று விண்ணப்பிக்க வேண்டும். தனியார் நில உரிமையாளர் அல்லது கட்டிட உரிமையாளரிடமிருந்து தடையின்மைச்சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாநில அரசு, மத்திய அரசு, உள்ளட்சி அமைப்புகள் அல்லது மத்திய அரசு மற்றும் மாநில அல்லது மத்திய அரசு துறை சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும். தனியார் அல்லது அரசு துறைச்சார்ந்த நிலங்கள் மற்றும் கட்டிடங்களில் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அமைப்பதற்கு தனித்தனியாக தடையின்மைச் சான்று பெற்றிருக்கவேண்டும்.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023ன்படி ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் படிவம் 6 இணைத்து ஒவ்வொரு விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் தனியார் இடத்திலோ, பொது இடங்களிலோ அமைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் தலா ரூ.750 செலுத்தவேண்டும். மாநகராட்சி அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப அனுமதி கட்டணம் ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31வரை) ஒவ்வொரு நிதியாண்டின் முதல் மாதத்தில் அனுமதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும்.
கல்வி நிறுவனங்கள் வழிபாட்டு தலங்கள் சாலையின் முக்கிய சந்திப்புகள், பேருந்து நிலைய முகப்பு பகுதிகளில் 50 மீட்டருக்கு அப்பாற்பட்டு விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அமைக்கவேண்டும். விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அரசால் நிர்ணயக்கப்பட்ட நினைவு சின்னங்கள் முன்பாகவும், குறிப்பிடப்பட்ட சிலைகள் முன்பாகவோ, சுற்றுலா முக்கியத்துவ பகுதிகளிலோ நிறுவக் கூடாது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023 பிரிவு 342-ன்படி வழிபாட்டு தலங்கள் மருத்துவ மனைகள் முன்பாக உரிய நிபந்தனைகளுக்குட்பட்டு அமைக்க வேண்டும்.
மின்கம்பிகள், புதைவழி கேபிள்கள், குடிநீர் பகிர்மான குழாய்கள், புதை வடிகால் குழாய்கள் ஆகியவை பாதிக்கப்படா வண்ணம் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 1998 பிரிவின்படி ஆணையரின் உரிய ஒப்புதல் இன்றி விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் ஒருவட சிறை தண்டனையோ அல்லது ரூ.5000 அபராதமாக விதிக்கப்படும் அல்லது இவை இரண்டும் சேர்த்தே விதிக்கப்படும்.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதி 2023 பிரிவு 346-ல் தனிநபர் தனது வியாபார நிறுவனம் தொடர்புடைய இடத்தில் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் வைத்துக்கொள்வதற்கும், தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கலையரங்குகளில் சம்மந்தப்பட்ட நிகழ்சிகள் தொடர்புடையவர்களால் வைக்கப்படும் மற்றும் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் தனிநபரின் நிலம் மற்றும் கட்டிடங்களில் உரிமையாளர்களாலோ அல்லது வாடகைதாரர்களாலோ வைக்கப்படும் விளம்பர பதாகைகளுக்கு விளக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post காஞ்சிபுரம் மாநகராட்சியில் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி பெறவேண்டும்: மாநகராட்சி ஆணையர், மேயர் தகவல் appeared first on Dinakaran.