சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பும் வீடியோக்கள்: சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்துக்காக இருதரப்பினர் குஸ்தி

சீர்காழி: திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் திருமண மண்டபம் களேபரமானது. இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது சிறு, சிறு சண்டைகள் நடப்பது சாதாரணம். அதிலும் மாமன்கள் முறுக்கி கொள்வது தனி ரகம். அவர்கள் சொதப்பலான காரணங்களை சொல்லி தங்களின் முக்கியத்துவத்தை காட்டுவார்கள். இந்த காரணத்திற்காக மணமகன், மணமகள் வீட்டார் அவர்களிடம் கெஞ்சுவதும் நடக்கும். இதற்கு அடுத்து மணமகன் வீட்டார் சீர்வரிசை குறித்து கலாட்டா காட்டுவார்கள்.

இதன்பின் நடக்கும் விருந்துதான் முக்கியம். அதிலும் பிரியாணி என்றால் சொல்லவே வேண்டாம். எனக்கு பீஸ் போடவே இல்லை என்பது தொடங்கி, வெறும் எலும்பைத்தான் போடுறீங்களாப்பா! என்று சண்டை பிடிப்பவர்களும் இருப்பார்கள். ஆனால், சைவ சாப்பாட்டிலும் இந்த அதகளம் தொடரத்தான் செய்கிறது. அந்த வகையிலான ஒரு ருசிகர களேபரம் சீர்காழியில் நடந்து அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் தெற்கு வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வருசைபத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், ஆனந்த கூத்தன் கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் இரு வீட்டார் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது பெண் வீட்டார் பாயாசம் கேட்டபோது பணியாளர்கள் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டேபிள், சேர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதை மாப்பிளை வீட்டார் தட்டிக்கேட்ட போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் திருமண மண்டபம் களேபரமானது. இந்த தாக்குதல் மண்டபத்திற்கு வெளியேயும் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார் வந்து இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பினர். இந்த களேபரத்திற்கிடையே நிச்சயதார்த்தம் செய்த மாப்பிள்ளையும், பெண்ணும் தங்களை வாழ்த்துவதை விட்டு இப்படி அடித்துக்கொள்கிறார்களே என்று திகைத்தபடி நின்றிருந்தனர். இந்த மோதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பும் வீடியோக்கள்: சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்துக்காக இருதரப்பினர் குஸ்தி appeared first on Dinakaran.

Related Stories: