சிஏஜி அறிக்கையில் பளிச்; ரயில் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியம்

புதுடெல்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பில் தொடர் அலட்சியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சிஏஜி அறிக்கையில், ‘ரயில்வே தடம் புரண்டது’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கை தற்போது விவாதிக்கப்படுகிறது.

ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சிஏஜி, தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் விவரம் வருமாறு:
டிராக் ரெக்கார்டிங் கார்கள் மூலம் ரயில் தண்டவாளத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு நிலைகளை ஆய்வு செய்யும் பணிகளில் 30 முதல் 100 சதவீதம் வரை குறைபாடு உள்ளது. ரயில் வழித்தட பராமரிப்பு பணிகளை (டிஎம்எஸ்) ஆன்லைன் மூலமாக கண்காணிக்க முடியும். ஆனால் டிஎம்எஸ் கண்காணிப்பு நடைமுறையானது ஒழுங்காக செயல்படவில்லை. கடந்த 2017 முதல் 2021 மார்ச் வரை பொறியியல் துறையின் குறைபாடு காரணமாக 422 ரயில் தடம் புரளும் சம்பவங்கள் நடந்துள்ளன. தண்டவாளத்தை முறையாக பராமரிக்காததால் 171 முறையும் ரயில்கள் தடம் புரண்டுள்ளது.

மெக்கானிக்கல் துறையின் குறைபாடு காரணமாக 182 முறையும், லோகோ பைலட்களின் (டிரைவர்) தவறு காரணமாக 154 முறையும் ரயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளன. ஆப்ரேட்டிங் துறையின் தவறு காரணமாக 275 முறை ரயில்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது. ரயில் விபத்துக்கள் தொடர்பான 63 சதவீத சம்பவங்களில், இன்னும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. 49 சம்பவங்களில், அறிக்கையை ஏற்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் செய்துள்ளனர்.

விதிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த உத்தரவுகள், பல்வேறு துறைகள் இடையேயான தொடர்பு, உரிய ஆய்வு ஆகியவற்றை முறையாக மேற்கொள்ளாததே பெரும்பாலும் ரயில் தடம் புரளும் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றன. ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணிக்கு 2018 -19ம் ஆண்டில் ₹9607.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019-20ம் ஆண்டில் ₹7,417 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதேபோல், தண்டவாள புனரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகையும், முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நடக்கும் 90 சதவீத விபத்துகள், அமைப்பு ரீதியான செயலற்ற தன்மையை காரணம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா போல் மைசூரு டிவிஷனில் நடக்க இருந்த விபத்து தவிர்ப்பு
ஒடிசா ரயில் விபத்து போல் கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா மாநிலம் மைசூரு டிவிஷனில் நடக்க இருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி 8ம் தேதி மைசூரு டிவிசனுக்கு உள்பட்ட பிரூர்-சிக்ஜாரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 4 தண்டவாளத்தில் ஒரு லூப் லைனில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மாலை 5.45 மணிக்கு சம்பர்க் கிராந்தி ரயில் ஹோசதுர்கா ரோடு ஸ்டேஷனை தாண்டி வந்து கொண்டு இருந்தது. அப்போது சரக்கு ரயில் நின்று கொண்டு இருந்த லூப்லைனுக்கு சம்பர்க் கிராந்தி ரயில் செல்ல சிக்னல் மாற்றிக்கொடுக்கப்பட்டது. தவறான திசையில் ரயில் இயக்க அனுமதி கொடுத்து இருப்பதை அறிந்த சம்பர்க் கிராந்தி இன்ஜின் டிரைவர் வண்டியை நிறுத்தியதால் பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வேயில் துறை ரீதியான விசாரணை நடந்துள்ளது. இதை முறையாக அனைத்து டிவிஷன்களுக்கும் எச்சரிக்கை செய்து இருந்தால் இப்போது ஒடிசாவில் 275 பேர் உயிரை பறிகொடுத்து இருக்க வேண்டிய சூழல் இருந்து இருக்கிறது.

The post சிஏஜி அறிக்கையில் பளிச்; ரயில் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியம் appeared first on Dinakaran.

Related Stories: