குமரி கலெக்டர் அலுவலகம் அருகே ரவுண்டானா அழகுபடுத்தும் பணி தொடக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானா அழகுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.நாகர்கோவில் மாநகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விபத்துகளும் அதிகரித்துள்ளது. வாகன பெருக்கம் காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகர்கோவிலில், குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணிகள் நடந்தது. நாகர்கோவில் கே.பி ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழி பாதையாக மாற்றப்பட்டது. இதனை தொடா்ந்து கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்த பழைய ரவுண்டானா பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அங்கிருந்த சுதந்திர தின விழா ஸ்தூபி மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் மாற்றப்பட்டுள்ளது. புதிய ரவுண்டானா மற்றும் கழிவு நீர் ஓடை அமைக்க ரூ.1.50 கோடிக்கு டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து சிக்னல், போக்குவரத்து போலீசாரின் தேவையின்றி இந்த பகுதியில் வாகனங்கள் இயல்பாக சென்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலும் குறைந்துள்ளது. தொடர்ந்து சாலையில் போக்குவரத்து அடையாளங்கள் மேற்கொள்ளுதல், நடைபாதையில் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரவுண்டானா பகுதியில் மண்மேடாக இருந்தது. இந்த பகுதியில் அலங்கார தாவரங்கள் மற்றும் புல்வெளி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஓரிரு நட்களில் இப்பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ரவுண்டானா பகுதிகள் புதுப்பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post குமரி கலெக்டர் அலுவலகம் அருகே ரவுண்டானா அழகுபடுத்தும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: