தவம் என்பது தொண்டு செய்யும் எண்ணம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

“தவம் உடையார்” “தவம்” என்ற சொல்லை அபிராமிபட்டர் ஐந்து பொருட்களில் பயன்படுத்துகிறார். “தவம்” என்ற சொல் உமையம்மையின் கருணையை பெறுவதற்கு செய்யும் முயற்சி என்கிறார் பட்டர். மேலும், தவத்தை எண்ணிக்கையால் அளவிடுகிறார். எண்ணிக்கை என்பது தவத்தை பொருத்த வரை காலத்தின் எண்ணிக்கை ஆண்டையும், ஜபத்தின் எண்ணிக்கை ஆவர்த்தியையும் குறிக்கும். ஆவர்த்தி அதிகமாக அதிகமாக உபாசனை தேவதையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். தேவதையை பற்றி அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள நம் கருத்தை அதற்கு தெரியப்படுத்தவும், அதன் கருத்தை நாம் உணர்ந்து கொள்ளவும், அதிக வாய்ப்பு உண்டாகும்.

ஆவர்த்தி என்பது ‘ஓம்’ என்பது முதல் துவங்கி ‘நம:’ ‘ஸ்வாஹா’, ‘ஸ்வதா’, ‘வௌஷட்’, ‘வஷட்’, ‘ஹும்பட்’ என்ற அந்தத்துடன் மூலமந்திரத்துடன் ஒரு முறை உச்சரிப்பது ஒரு ஆவர்த்தி எனப்படும். மேலும், ஜபத்தை பற்றிய தேவதை, அதிதேவதை, ப்ரத்யதி தேவதை, பூஜிக்க வேண்டிய காலம், பூசிக்க வேண்டிய இடம், தேவதையின் வடிவம், உபாசனையில் பயன்படுத்த வேண்டிய பொருள்கள் தேவதைக்குரிய யந்திரம், தேவதையின் உருவத்தை அமைக்கும் உலோகம், கல், ஜபம், செய்பவரின் மனநிலை, அமர்ந்திருக்கும் ஆசனம், ஜபத்தை உச்சரிக்கும் முறை மானஸ, வாசிக, உபாம்சு, என்ற வகைமை நன்கு அறிந்தும், உரிய யந்திர வடிவை வரைந்தும், பாராயணத்தை, தொடர்ந்தும் இடை விடாமலும், உபாசனை முறையில் தவறில்லாமலும் ஜெபம் செய்ய வேண்டியதை ஜெபவழி என்று குறிப்பிடுவதிலிருந்து நன்கு உணரலாம்.

மேலும், இத்தகைய முறையில் தினசரி துவங்கி ஆண்டுக் கணக்கில் ஆவர்த்தி கணக்கில் தவம் செய்வதை தன் முயற்சியாக கொண்டவரையே “தவம் உடையார்” என்கிறார். தவமானது முக்தியை அளிக்கும் சாதனம். அனைத்து பாவங்களையும் அழித்து அனைத்து விதமான புண்ணியங்களையும் சேர்த்து ஆன்மாவை இறைவன் திருவடியிலே சேர்க்கும் பண்பு கொண்ட சில ஒழுக்க நெறியான பிரம்மசர்யம், போன்ற இறைவனைக் குறித்த செயல்முறையையே “தவம்” என்று குறிப்பிடுகிறார். இதையே ‘தவம் முயல்வார் முத்தியும்’ (29) என்பதனால் அறியலாம். இந்த சொல்லையும் மனதில் கொண்டே “தவம் உடையோர்” என்கிறார்.

தவமானது இறையருளால் மானுடர்களுக்கு மட்டும் கிடைக்கும், உயர்ந்த தேவர்களுக்கே கிடைக்காத இறைவனை வணங்கும் முறை மற்றும் இறை அன்பு இது இரண்டையும் “தவம்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இதை ‘சீரடி சென்னி வைக்க எங்கட் கொருதவம் எய்தியவா!’ (35) என்பதிலிருந்து அறியலாம்.

“தவம்” என்பது தொண்டு செய்யும் எண்ணம்.“தவம்” என்பது உமையம்மையின் பாதத்தைத் தொழுவது.“தவம்” என்பது உமையம்மையின் உண்மைக் குணநலன்களை நன்கு அறிந்து அதனால் உமையம்மையை நேசிப்பது.“தவம்” என்பது முன்னை வினைப்பயனால் வருகிறது என்கிறார் அபிராமிபட்டர். இதை, ‘தொண்டு செய்யாது, நின்பாதம் தொழாது… அப்பரி சடியேன் கண்டு செய்தால், அது கைதவமோ அன்றி செய்தவமோ?’ (45) என்பதனால் அறியலாம். மேலும், கைதவம் என்பது தவம் செய்வது போல் போலியாக இருப்பது, என்ற பொருளிலும் பயன்படுத்தியிருப்பது எண்ணி மகிழத்தக்கது.

கைதவம் பலனை தராது, அதனால் தவம் என்பதற்குப் பயனை தருவது என்பது பொருளாகும். இதையும் மனதில்கொண்டே “தவம்” என்கின்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இவையெல்லாவற்றிற்கும் மேலாக “தவம்” என்பது உமையம்மையே. அவளது அருள் அனுபவமே என்பதை ‘தவளே’ (44) என்பதனால் அறியலாம். இந்த ஐவகை தவத்தையும் மனதில் கொண்டே தவத்தை செய்பவரைத் தவமுடையார் என்றார். தன் மனத்தில் தோன்றியபடி வழிபாடு செய்யாமல் சாத்திரங்களை சார்ந்து அதில் சொல்லிய படிதவம் செய்வதையே முன் சொன்ன சாரும் என்ற சொல்லை மீண்டும் சேர்ந்து “சாரும் தவம் உடையார்” என்றார்.

“படையாத தனம் இல்லையே”

“தனம்” என்ற சொல்லால் “படைக்கும் தனம்” என்றும், “படையாத தனம்” என்றும், “தனம்” என்பதை இரண்டு வகையில் அபிராமிப்பட்டர் பயன்படுத்துகிறார். பொதுவாக நாம் முயற்சிசெய்து உருவாக்கிய வாழ்க்கைக்குத் தேவையான நன்மைகளை “படைக்கும் தனம்” என்ற சொல்லால் குறிப்பிடுவர். உதாரணமாய் வீடு, வேலை, இவைகளைக் குறிப்பிடலாம். “தனம்” என்பதால் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலையின் பயனாக கிடைக்கும், செல்வத்தைக் குறிப்பிடுகிறார்.

இதை `அழகு புகழ் செல்வம்’ (பதிகம்) என்ற வரிகளால் அறியலாம். “படையாத தனம்” என்றால் மனிதன் தன் முயற்சியால் ஈட்டாத முன்னோர்களின் முயற்சியால் பிறப்பின் அடிப்படையில் வந்துசேர்ந்த செல்வத்தை “படையாத தனம்” என்கிறார். இப்பாடலைப் பொறுத்தவரை, “சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே” என்பதை இணைத்தே பொருள் சொல்ல வேண்டும். வடசொல்லில் “தனம்” என்பதற்கு ஐந்து பொருள்கள் உண்டு “தனம்” என்பது பசிக்குகாரணமாகி நம் உடலிலே இருக்கும் தீ. இதைச் சாத்திரம் ஜடாரக்னி என்கிறது. உயிர் வாழ்வதற்கு காரணமான பிராணவாயுவை சுவாசத்தை “தனம்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத நீரின் அம்சமான ரத்த ஓட்டத்தை “தனம்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். உயிர் வாழ்வதற்கு காரணமான பூமியின் அம்சமான உடலைத் “தனம்” என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். மேற்சொன்ன இந்த ஐந்தையும், மானுடர்களால் தானே உற்பத்தி செய்ய இயலாது, ஆன்மாக்கள் பொருட்டு உமையம்மையால் கொடையாக அளிக்கப்பட்டது, இதை ‘பூத்தவளே’ (13) என்ற வார்த்தையால் அறியலாம். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஜடாரக்னி, உடல், அதில் ரத்தம், வெளி இயக்கத்திற்கு உரிய பிராணவாயு இவை அனைத்தும் தனித்தனியாக அவரவர் வினைவழி அவரவர்க்கு உரிய வழியில் உமையம்மையின் அருளால் ஆன்மாக்கள் தங்குவதற்குக் கட்டப்பட்டது என பொருள்படும் யாக்கையையே [உடலையே] “தனம்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

அதை தன்னால் படைத்துக் கொள்ள இயலாது என்பதால், “படையாத தனம்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இல்லையே என்பதனால் உமையம்மை இதை யார் சொல்லியும் செய்யவில்லை தன் இயல்பான கருணையினால் ஆன்மாக்களுக்கு உதவுவதற்காக செய்கிறார். அதனால், “படையாத தனம் இல்லையே” என்று குறிப்பிடுகிறார். ஆன்மாவிற்கு உடல் “தனம்” என்கிறது வேதம், `தனம் அக்னிர்’ ‘தனம் வாயு’ `தனம் இந்ரோ’ ‘தனம் வசு’’ “வருணம் தனமஸ்னுதே’’ என்பதனால் நன்கு உணரலாம். இதனாலேயே தவம் உடையார்க்கு “படையாத தனம் இல்லையே” என்கிறார்.

“அந்தமாக”

“பாரும், புனலும், கனலும், வெங்காலும் படர்விசும்பும்” என்பதனால், வெளியில் உள்ள பஞ்ச பூதகலப்பினால் தோன்றிய இவ்வுலகத்திலுள்ள பொருள் அனைத்தையும், “ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி” என்பதினால் மனித உடலில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி, இவற்றோடு இப்புற உலகம் கொள்ளுகிற தொடர்பையும், ஒன்றுபடச் சேரும் என்பதனால் மனதையும், “தலைவி! சிவகாம சுந்தரி!

சீரடிக்கே” என்பதனால் சரீரத்தின் வெளியிலுள்ள பஞ்சபூதத்தின் வழியாக மானுடர்களுக்கு அனுபவத்தை உண்டாக்கும். அதிதேவதைகளையும், “சாரும் தவம் உடையார்” என்பதனால் ஆன்மாவையும், “படையாத தனம் இல்லையே” என்பதனால் ஆன்மாவிற்காகக் கருணையினால் படைத்தருளிய இவ்வுடலையும் நாம் கேட்காமலேயே படைத்தருள் செய்த கருணையை உணர்ந்து அருள்பெற முயல்வோம்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post தவம் என்பது தொண்டு செய்யும் எண்ணம்! appeared first on Dinakaran.

Related Stories: