அனுமனைக் கண்ட துளசிதாசர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒரு சமயம் துளசிநாதர் நான்கு நாட்களுக்கு மேல் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று கூறி வெளியூருக்குச் சென்றார். அவர் சென்ற உடனே ரத்னாவளியின் தந்தையார் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் தன்தாய் வீட்டை திரும்பிப் பார்க்காமல் கணவனுடனே வாழ்ந்தவள், தந்தையின் இறப்பைச் சென்று பார்க்க வேண்டும், அது மகளின் கடமையாகும். ஆனால், கணவனுடைய அனுமதியில்லாமல் எவ்வாறு செல்வது என்று திகைத்தாள்.

அப்பொழுது அருகில் இருந்த பக்கத்து வீட்டார்கள், “நீ நிச்சயமாக உன்னுடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அவர் ஆன்மாவிற்கு நிம்மதியை வழங்க வேண்டும்’’ என்று கூறியதால் வேறு வழியின்றி ஊருக்குச் சென்றாள்.அன்று நான்கு நாட்களில் திரும்பி வருவேன் என்று கூறிய துளசிதாசர் இரண்டே நாளில் திரும்பி வந்தான். மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ந்தார். பக்கத்து வீடுகளில் சென்று காரணத்தை கேட்டறிந்தார்.

மாமனார் மறைந்த செய்தியை கேட்ட துளசிதாசர், தன் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஓர் இனம் புரியாத உந்துதலால் உடனே புறப்பட்டான். அந்த சமயம் விடாது தொடர்ந்து அடை மழை பொழிந்து ஊரையே இருட்டு உலகமாக்கிக் கொண்டிருந்தது.வீட்டை விட்டு யாரும் வெளியே வரவில்லை. கண்ணைக் கூசச் செய்யும் மின்னலும், செவியையும் இதயத்தையும் நடுநடுங்க வைக்கும் இடியின் ஓசை, தன் தலையில்தான் இடி விழுந்ததோ என்ற குலை நடுங்க வைத்தது.

பிசாசுகள்கூட அஞ்சும் வேளையில், துளசிதாசர் மழையையும் பொருட்படுத்தாமல் தன் மனைவியை காண வேண்டும் என்ற உந்துதலால் காம வேட்கையால் அன்று இரவே யமுனை ஆற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் படகோட்டிகளை வரவழைத்தார். அவர்கள் வெள்ளம் அதிகமாக இருப்பதால் படகு குடை சாய்ந்து விடும். எனவே தங்களால் வர இயலாது என்று கூறி மறுத்தனர். அதனால், தானே யமுனை ஆற்றில் குதித்து நீந்தி செல்ல முயற்சி செய்தார்.

அப்பொழுது, எந்த ஒரு கட்டையும் இல்லாததால் கட்டை கிடைக்குமா என்று எதிர்பார்த்த பொழுது அதிஷ்டவசமாக ஒரு கட்டை கிடைத்தது. அக்கட்டையைப் பிடித்துக் கொண்டே அக்கரை சென்று சேர்ந்தார். அப்பொழுது மின்னல் தாக்குதலில் பார்த்தால் அது கட்டையல்ல ஒரு பிணம் என்பதனை அறிந்தார்.துளசிதாசர் உடனே அந்தப் பிணத்தை அப்படியே விட்டுவிட்டு, தன்னுடைய சட்டைகளை நன்றாக பிழிந்து அணிந்துகொண்டு மாமியார் வீட்டை அடைந்தார். அங்கே மாமியார் வீட்டைச் சுற்றிலும் தீவு போல மழைநீர் சூழ்ந்து இருப்பதைக் கண்டார்.

உடனே அருகில் இருந்த மரத்தில் ஏறினார். மரக்கிளையைப் பற்றி வீட்டின் முன் இறங்கினார். பற்றியது பாம்பு என்பதையும் அறியாத நேரத்தில் சப்தம் கேட்டு ரத்னாவளி கதவு திறந்தாள். இலாந்தரைத் தூக்கிப் பிடித்தாள். எதிரே, கணவன் நின்றிருந்தார்.

அவன் கண்களில் தெரிந்த கொடூரமான வேட்கையையும் அறிந்தாள். அவளுக்கு எல்லாம் புரிந்தது. ஆச்சரியம், அச்சம், அருவருப்பு, வேதனை, வெறுப்பு, வெட்கம் என யாவும் ஒன்று திரண்டு முன்னே பந்து போல உருண்டு வந்து நின்றது. இந்த அடைமழையில் நீங்கள் படகில் வந்தீரா? என்று கேட்டார். இல்லை… உண்மையைக் கூறினான். பிணத்தையே பற்றிக்கொண்டு வந்தேன் என்றதும், அப்படி என்றால் நீங்கள் இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் பாசமா? இல்லை மாமனார் மீது நீங்கள் வைத்திருக்கின்ற மரியாதையா? என்று பாதியில் நிறுத்தினாள்.

அவன் கண்களில் தெரிந்த ஒருவிதமான ஆசை உந்துதலை அறிந்து கொண்டு மாமிசமும், எலும்பும், ரத்தமும், மூடிய தோல் மேல் கொண்ட அற்ப சந்தோஷ மோகத்தை மனித சரீரத்தின்மீது காட்டுவதைவிட ராமபிரானின் மீது பக்திவைத்துக்கொண்டால் பிறவியாகிய பெருங்கடலை கடக்கவாவது வழி கிடைக்கும்.

கேவலம் அழியக்கூடிய தேகத்தின் மீதா உங்கள் பற்று நிலைத்திருக்க வேண்டும். நிலையாமையை உணர்ந்தால் உண்மையை அறிந்தால் இவ்வளவு கடந்து வந்திருக்க மாட்டீர்கள் என்று சுடு சொற்களால் கூறினாள். மனைவியின் சுடு சொற்களைக் கேட்டு, அந்த வார்த்தைகள் நெஞ்சையே கத்தி கொண்டு கிழித்தது போன்று உணர்ந்தார். அதே வேகத்தோடு வீடு திரும்பினார். அந்த இரவில் அமைதியாக யோசித்தார். நிலையாமை அழியக்கூடியது, நிலைத்து நிற்கக்கூடிய மோட்சத்தை அருளக் கூடியவர் `எம்பெருமான் ராமர்’ என்பதை அறிந்ததால், அகக்கண் திறந்து, ஞானம் விளக்கு ஏற்றப்பட்டது.

உடனே அங்கே இருந்து நேராக காசிக்குச் சென்றார். கங்கையில் மூழ்கினார். இரு வேளையும் கங்கையில் நீராடினார். ராமனுடைய கதைகளை பிரசங்கம் செய்யத் தொடங்கினார். தினமும் கங்கையில் நீராடிவிட்டு கமண்டலத்தில் நீரைக் கொண்டு வந்து, கை கால்களை அலம்பிவிட்டு, மீதம் இருக்கும் நீரை அருகே இருக்கின்ற ஆலமரத்திற்கு ஊற்றுவார். இதுபோல, தினமும் செய்துவந்தார்.

அந்த ஆலமரத்தில் ஒரு பிரம்ம ராட்சசன் வசித்துவந்தான். அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. அதனால் அலைந்து திரிந்த போது, துளசிதாசர் தினமும் ஊற்றிய நீரைப் பருகினான். இந்த செயலால் அதனிடமிருந்த தீய குணங்கள் எல்லாம் விலகி, நல்ல ஆத்மாவாக மாறிக்கொண்டு வந்தான். இதை அவரும் அறியவில்லை. தினமும் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து ராம நாமத்தையும் அவருடைய கதைகளையும் பிரசங்கம் செய்வார்.

அதைக் கேட்பதற்கு கங்கையில் நீராடிவிட்டு வரும் யாத்திரிகர்கள், அங்கே அமர்ந்து அவருடைய பிரசன்னத்தை கேட்டு மகிழ்ந்து செல்வர். இது வாடிக்கையாக நடைபெறும். இந்த புனிதமான கங்கை நீரின் அருளால், பிரம்ம ராட்சசன் புனிதம் அடைந்தான்.ஒரு நாள் துளசிதாசரின் முன்னே பிரம்ம ரட்சசன் தோன்றினான். அதனைக் கண்டதும் ஒரு வினாடி துளசிதாசருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ராமா…ராமா.. ராம்.. ராம்… என்று பதறி அடித்துக்கொண்டு ராம நாமத்தை ஜெபித்தார்.

உடனே, பிரம்ம ராட்சசன் துளசிதாசர் பாதங்களில் பணிந்து, “சுவாமி! நான் ஒரு தீய ஆத்மா. உங்களால் புனிதமடைந்தேன்’’ என்று கூறினான். துளசிதாசர் வியந்துவிட்டார். “என்ன என்னால் நீ புனிதம் அடைந்தாயா? எவ்வாறு எனக்கு ஒன்றும் புரியவில்லையே’’ என்று கூறினார். “ஆமாம்! நீங்கள் தினமும் கங்கையில் நீராடி கமண்டத்தில் நீரைக்கொண்டு வந்து கை கால் அலம்பி மீதம் இருக்கும் நீரை இந்த மரத்தடியில் ஊற்றுவீர்கள் அல்லவா?’’ “ஆமாம்’’ “அந்த மரத்தில்தான் நான் வசித்தேன். எனக்கு தாகம் எடுத்த போதெல்லாம் நீங்கள் ஊற்றிய நீரைப் பருகி தீய ஆத்மாவான நான் நல்ல ஆத்மாவாக மாறினேன். இப்பொழுது நான் சாபம் நீங்கி மோட்ச கதிக்குச் செல்லப் போகின்றேன்’’ என்றது.

இதைக் கேட்டதும் துளசிதாசர் மிகவும் மகிழ்ந்து, “ஆஹா இவை அத்தனையும் எம்பெருமான் ராமனின் பெருமை அல்லவா! அவரின் மகிமையல்லவா!’’ என்று கண்களில் நீர் கசிய, ராமா… ராமா… என்று ராம நாமத்தில் ஆழ்ந்தார்.

தொகுப்பு: பொன்முகரியன்

The post அனுமனைக் கண்ட துளசிதாசர் appeared first on Dinakaran.

Related Stories: