ஒடிசா ரயில் விபத்து சம்பவம், பின்பக்க கண்ணாடியை பார்த்து கார் ஓட்டும் மோடி: அமெரிக்காவில் பாஜக மீது ராகுல் பாய்ச்சல்

நியூயார்க்: ஒடிசா ரயில் விபத்து குறித்து கேள்வி கேட்டால் அவர்கள் நம் மீதே பழி சுமத்துவார்கள்; மோடி பின்பக்க கண்ணாடியை பார்த்து கார் ஓட்டுகிறார் என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கூறினார். அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி மக்களிடம் பேசினார். முன்னதாக அந்த நிகழ்ச்சியில் ஒடிசா ரயில் விபத்தில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், ‘இந்திய நாகரீகம் என்பது யாரையும் அடிப்பது, யாரையும் வெறுப்பது அல்லது இழிவுபடுத்துவது அல்ல. அன்பு தான் உண்மை. அதை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். வெறுப்பைப் பரப்புவதுதான் அவர்களின் (பாஜக) வேலையாக உள்ளது. அன்பைப் பரப்புவதுதான் எங்களின் (காங்கிரஸ்) வேலையாக இருக்கிறது. அவர்களின் வேலையை ஏன் நாங்கள் செய்ய வேண்டும், நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து செய்வோம்.

இன்றைய இந்தியாவில் ஊடகங்களும், ஜனநாயகமும் இல்லாமல் வாழ முடியாது. அன்பையும் பாசத்தையும் நம்பும் மக்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் (பாஜக) கேளுங்கள். அவர்கள் திரும்பி நம் மீதே பழியை சுமத்துவார்கள். ரயில் விபத்து (ஒடிசா) எப்படி நடந்தது என்று அவர்களிடம் (பாஜக) கேட்டால், அதற்கு அவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று கேட்பார்கள்? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்த நினைவு எனக்கு இருக்கிறது. அப்போது நடந்த ரயில் விபத்தை, ஆங்கிலேயர்களால் நடந்தது என்று காங்கிரஸ் கட்சி கூறவில்லை.

அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்கள், விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்கள். காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை போன்று, இந்தியாவில் ஒரு கோட்சேவுக்கும், மற்றொரு காந்திக்கும் இடையே போர் நடந்து வருகிறது. அவர்கள் நாட்டில் வெறுப்பை பரப்பி வருகிறார்கள். ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றி உள்ளனர். அவர் (பிரதமர் மோடி) காரை ஓட்ட முயற்சிக்கிறார். ஆனால் அவர் பின்பக்க கண்ணாடியை பார்க்கிறார். அதனால் அந்த கார் முன்னோக்கி செல்லாமல் விபத்தில் சிக்குகிறது என்பது அவருக்குப் புரியவில்லை. அவர்கள் (பாஜக, ஆர்எஸ்எஸ்) எதிர்காலத்தை பற்றி பேசமாட்டார்கள். கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே பேசுவார்கள்’ என்றார்.

The post ஒடிசா ரயில் விபத்து சம்பவம், பின்பக்க கண்ணாடியை பார்த்து கார் ஓட்டும் மோடி: அமெரிக்காவில் பாஜக மீது ராகுல் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Related Stories: