பவானிசாகரில் பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடும் போராட்டம்: பவானி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க கோரிக்கை..!!

ஈரோடு: பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்க கோரி பவானிசாகரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குந்தாவில் உற்பத்தியாகி பவானி நகரில் காவிரி ஆற்றில் கலக்கும் நதி பவானி. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி ஆற்றின் மூலம் இரண்டரை லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகி உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆற்றின் கரைகளில் இயங்கும் ஜவுளி காகித ஆலைகளின் ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பவானி சாகர் அணைக்கு வரும் நீர் மாசடைந்து நிறம் மாறி வருகிறது.

இந்நிலையில் பவானி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க கோரி பவானி சாகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை ஆய்வு செய்ய அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்திருப்பதால் அதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வு செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

The post பவானிசாகரில் பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடும் போராட்டம்: பவானி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: