சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்

ஊட்டி : விடுமுறை நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியபடி காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுக்கு பின் கடந்த 2 மாதங்களாக கோடை சீசன் களை கட்டி காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடகாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். கோடை விழா நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையில் அண்டை மாநிலங்களில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதேநேரம் தமிழகத்தில் 6ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தமிழக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

குறிப்பாக ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் படகு சவாரி செய்ய கடும் போட்டி நிலவியது. தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் கார்டன் பகுதி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் காணப்பட்டது. பெரிய புல் மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

இதேபோல ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களின் மூலம் வந்திருந்ததால், தாவரவியல் பூங்கா சாலை, கமர்சியல் சாலைகளில் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்பட்டது. நேற்று மதியம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் மழை பெய்த நிலையில் சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்தது. மழை குறைந்ததற்கு பின் வழக்கம் போல கூட்டம் காணப்பட்டது.இதனிடையே விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நேற்று மாலை முதல் கூட்டம் குறைய துவங்கியது. இதனால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கூட்டம் காணப்பட்டது.

The post சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: